வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீட்டுத்திட்டம்

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து இதை நடைமுறைப்படுத்தவுள்ளன.

மூன்று நடைமுறைகளில் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதலாவது நடைமுறைப்படி, சொந்த காணியில் வீடு நிர்மாணிப்பது. இரண்டாவது, காணி இல்லாதவர்களுக்கு நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் நிர்மாணித்தல். மூன்றாவது முறை, அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்தல்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீடமைப்புத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், இதுவரை சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.