Euro Tech – Compass: திசைக்காட்டி டு வழிகாட்டி; உலகையே வழிநடத்தும் கருவியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் முதல் கண்டுபிடிப்பு – திசைக்காட்டி (Compass).

அன்று

இன்றைக்கு சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய மூதாதையரான ஹோமோ சேபியன்ஸ்கள் காலம் தொடங்கி மனிதன் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறான். ஆரம்பக் காலத்தில் நாடோடி வேட்டைக்காரர்கள், அவர்கள் வேட்டையாடும் விலங்குகளின் மந்தைகளைப் பின்பற்றிப் பயணப்பட்டார்கள். மனிதன் பரிணாம வளர்ச்சியில் மேம்பட ஆரம்பித்த போது, அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு அப்பால் தங்கள் எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கினர். இது எப்படி அவர்களால் அன்று சாத்தியப்பட்டது என்பது, எவ்வாறு புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்து பறவைகள் இடம் பெயர்கின்றனவோ அது போலவே நினைத்துப் பார்க்க இயலாத ஆச்சரியமான ஒரு விஷயம்.

லோடெஸ்டோன் (Lodestone)

மனிதனைப் பொறுத்தமட்டில் உலகின் முதலாவது ஜிபிஎஸ் என்றால் அது நட்சத்திரங்கள்தான். ஆதி மனிதன் தங்கள் திசையைத் தீர்மானிக்கவும், வழியைக் கண்டறியவும் இயற்கையையே நம்பியிருந்தான். நட்சத்திரங்களின் நிலைப்பாடு, மலைகள், ஆறுகள் மற்றும் பிற இயற்கை அடையாளங்கள், தீயிலிருந்து வரும் புகை, தேவாலய மணிகளின் சத்தம், பறவைகளின் பறக்கும் திசை போன்றவையே ஆதி காலத்துத் திசை காட்டும் நேவிகேட்டர்களாக இருந்தன.

பாலினேசியர்கள் எந்தத் திசைக்காட்டியையும் பயன்படுத்தாமல் பசிபிக் பெருங்கடலில் பரந்த தூரம் பயணித்த முதல் கில்லாடிகள் என்ற பெருமையைப் பெற்றனர். இவர்கள் நட்சத்திரங்களின் நிலை, அலை வடிவங்கள், பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தித் திறந்த கடலில் துணிச்சலாகப் பயணித்தனர். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஃபீனீசியன் (Phoenicians) மாலுமிகள் சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் பழைமையான வரைபடங்கள் மற்றும் அவதானிப்புகளைப் பயன்படுத்தி திசைகளைத் தீர்மானித்து கடலில் பயணித்தார்கள்.

ஆனால் உலகின் வட துருவத்தை நோக்கிச் செல்லும் லோடெஸ்டோன் (Lodestone) எனப்படும் காந்தமயமாக்கப்பட்ட ஒரு சிறிய எளிமையான உலோகத் துண்டின் கண்டுபிடிப்பு மனித நாகரீகத்தையே திருப்பிப் போட்டது.

கி.மு 700-500 காலகட்டத்தில் சீன விவசாயிகள் தம் விளை நிலத்திலிருந்து சில உலோகங்களைக் கண்டுபிடித்தனர். அதை ஆராய்ந்த போது அவை இயற்கையான காந்தத்தன்மை வாய்ந்தவை என்பதைக் கண்டறிந்தனர். எனவே அவர்கள் இந்த மெக்னடைஸ் செய்யப்பட்ட உலோகத்தை நம்ம ஊர் தோசைக் கரண்டி வடிவில் மாற்றி, ஒரு பிரேஸ் தட்டில் வைத்தபோது அது புவியின் வடக்கு நோக்கிக் காட்டியது. “அடடா இது சூப்பரா இருக்கேப்பா…” என்று வியந்து, அதை தம் ஃபெங் ஷுயி வாஸ்து முறையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். காலப்போக்கில், புவியின் காந்த வடக்குத் திசையை நோக்கி எப்போதும் இருக்கும் ஒரு கருவியாகத் திசைக்காட்டியை உருவாக்க இந்த லோடெஸ்டோன்களைப் பயன்படுத்த முடியும் என்பதை சீனர்கள் உணர்ந்தனர்.

உண்மையில் திசைக்காட்டியை நேவிகேஷனுக்காக முதன் முதலில் பயன்படுத்தியவர்களும் சீனர்கள்தான் என்றாலும் கி.மு 6-ம் நூற்றாண்டில் லோடெஸ்டோன்களின் காந்தப் பண்புகளைப் பற்றிய குறிப்புகளைக் கிரேக்கத் தத்துவஞானி தேல்ஸ் ஆஃப் மிலேட்டஸ் (Thales of Miletus) என்பவரே முதன் முதலில் எழுதினார்.

கிரேக்கத் தத்துவஞானி தேல்ஸ் ஆஃப் மிலேட்டஸ் (Thales of Miletus)

பண்டைய சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட திசைக்காட்டி, ஐரோப்பாவை அடைந்ததும் டேக் டைவர்ஷன் எடுத்து அதன் மாற்றுப் பயணத்தைத் தொடங்கியது. அதுவரை வெறும் காந்தப்புலத்தில் செயற்படும் கருவியாக மட்டுமே இருந்த லோடெஸ்டோன்கள் 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்குச் சென்ற பிறகு மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சியின் ஒரு மாபெரும் மைல்கல்லாக மாறியது.

12 மற்றும் 13-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் முதன் முதலில் ஐரோப்பாவில் திசைக்காட்டிகளின் அறிமுகம் உலகளாவிய ஆய்வு மற்றும் வர்த்தகத்தின் போக்கையே ஆழமாக மாற்றியது. ஆரம்பக் காலத் திசைக்காட்டிகளின் முதல் வடிவம் மிகவும் எளிமையாகவே இருந்தது. அதாவது காந்தமாக்கப்பட்ட ஊசி ஒன்று மரத்துண்டில் இணைக்கப்பட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் மிதந்த வண்ணம் இருக்கும். ஒரு கட்டத்தில் ஊசி தண்ணீரில் ஆடாமல் அசையாமல் நிலையாக நிற்கும் போது அதன் முனை புவியின் வடக்கைக் காட்டியது.

அதன் பின் 14-ம் நூற்றாண்டில் உலர் மரைனரின் திசைக்காட்டிகள் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டு முதன்முதலில் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டது. 1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது பயணத்தின் போது திசைக்காட்டியைப் பயன்படுத்தியது கண்டங்களை இணைத்து நாகரீக நவீன உலகத்தை வடிவமைத்தது. புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகின் கதவுகள் திறந்துவைக்கப்பட்டன. புதிய வர்த்தக வழிகளை உருவாக்கி நீண்ட தூர வழிசெலுத்தலைப் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றின. இது பல ஆராய்ச்சிகளுக்கும், உலகமயமாக்கலுக்கும் வழி வகுத்தது. அதே போல உலகின் காலனித்துவ பேரரசுகளின் விரிவாக்கத்திற்கும், பாதை வகுத்துக் கொடுத்தது.

காம்பஸ் | Compass

16-ம் நூற்றாண்டில், ஆங்கிலேயக் கணிதவியலாளரும் நேவிகேட்டருமான எட்வர்ட் ரைட், முந்தைய பதிப்புகளை விட மிகவும் துல்லியமானதும் பயன்படுத்த எளிதானதுமான கடற்படையின் திசைக்காட்டியைக் கண்டுபிடித்தார். 18-ம் நூற்றாண்டில், பிரெஞ்சு வானியலாளர் மற்றும் கணிதவியலாளரான Guillaume Le Gentil, டிப் ஊசி திசைக்காட்டியை உருவாக்கினார். இது பூமியின் காந்தப்புலத்தை ஈடுசெய்வதன் மூலம் மிகவும் துல்லியமான இலக்கை நோக்கிச் செல்ல உதவியது.

18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில், மனித சமூகத்தை வடிவமைப்பதில் திசைக்காட்டித் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. 1837-ம் ஆண்டில், ஜெர்மன் இயற்பியலாளர், வில்ஹெல்ம் வெபர், கம்பிச் சுருள் மற்றும் காந்தத்தைப் பயன்படுத்தி, முதல் மின்காந்த திசைக்காட்டியை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது, கைதிகள் தப்பிக்க உதவும் வகையில் பொத்தான்கள் மற்றும் ரேஸர் பிளேட்கள் வடிவில் ஜெர்மன் முகாம்களில் உள்ள போர்க் கைதிகளுக்குத் திசைக்காட்டிகள் கடத்தப்பட்டன.

இன்று

நவீனத் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் காம்பஸ்ஸின் வளர்ச்சி மனிதனின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது. சொல்லப்போனால் திசைக்காட்டியின் உதவி இல்லாமல், உலகம் இடைக்காலத்திலிருந்து நவீன யுகத்திற்கு மாறவே இன்னும் பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். 20-ம் நூற்றாண்டில், திசைக்காட்டியின் துல்லியத்தையும் பயன்பாட்டையும் அதிகரிக்க ஐரோப்பியர்களால் பல புதிய நுணுக்கங்களும் யுக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

காந்த திசைக்காட்டி (Magnetic Compass) கைரோ திசைக்காட்டி (Gyro Compass), திரவம் நிரப்பப்பட்ட திசைக்காட்டிகள் (Liquid-filled Compasses) என வெவ்வேறு பயன்பாடுகளைக் கொண்ட, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான திசைக்காட்டிகள் இன்று வந்துவிட்டன.

Compasses

நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பந்து திசைக்காட்டிகள் (Ball Compasses) முதல் உங்கள் குழந்தையின் கைகளில் இருக்கும் சிறிய கீ-செயின் மாடல் காம்பஸ் வரை பல்வேறு வடிவங்களில் வரும் பல திசைக்காட்டிகள் திரவம் நிரப்பப்பட்டவைதான். திரவத்தின் பாகுத்தன்மை (Viscosity) திசைக்காட்டியின் வடிவமைப்பைப் பொறுத்து வேறுபடுமாயினும் ஆல்கஹால், எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவைதான் பொதுவான மூன்று தேர்வுகள். இவை தவிர்த்து Marine Compass, Prismatic Compass, Solid State Compass எனப் பல வகைகள் இன்று நடைமுறையில் உள்ளன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சேர்ந்து காம்பஸ்ஸின் அதிரடி முன்னேற்றம் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்ஸ் எனப்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் வருகையோடு வேகமெடுத்தது. காம்பஸ்ஸும் GPS-ம் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட இருவேறு தொழில்நுட்பங்களாயினும் ஜிபிஎஸ்சின் கண்டுபிடிப்புக்கு அடித்தளமே காம்பஸ்தான்.

திசைக்காட்டி என்பது திசையைத் தீர்மானிக்கப் பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தும் ஒரு வழிசெலுத்தல் கருவி. ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) என்பது செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பு. பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்புடைய திசையைத் திசைக்காட்டி தீர்மானிக்கும் அதேவேளையில் செயற்கைக்கோள் சமிக்ஞைகளின் அடிப்படையில் இருப்பிடத்தைத் தீர்மானிக்கிறது ஜிபிஎஸ்.

மிகவும் துல்லியமான இருப்பிடத் தரவை வழங்குவதன் மூலம் நவீன உலகில் மனிதன் பயணிக்கும் வழிகளில் பல புரட்சிகரமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது GPS தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. 1970களில் United States Department of Defense-யினால் முதலில் ராணுவ உபயோகத்துக்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம் 1980களில் பொதுமக்களைச் சென்றடைந்தது. இன்று தொலைபேசி, கைக்கடிகாரம், மேப்பிங், Navigation, சர்வேயிங் முதல் விமானப் போக்குவரத்து மற்றும் ராணுவ நடவடிக்கைகள் வரை ஜிபிஎஸ் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

GPS

சென்டிமீட்டர் நிலையில் மிகத் துல்லியமான பொஷிஷனிங்கைப் பெற முடியும் RTK எனப்படும் நிகழ்-நேர இயக்கவியல் (Real-time Kinematic) தொழில்நுட்பம், GPS-இன் லேட்டஸ்ட் வடிவமாகும். அதே போல GNSS எனப்படும் Global Navigation Satellite System வானிலை ஆய்வுகளுக்கு மிகத் துல்லியமான தரவுகளை இன்று வழங்குகிறது. High-sensitivity GPS மூலம் உலக வரைபடத்திலேயே இல்லாத அத்திப்பட்டிக்குப் போனால் கூட இரவு டின்னருக்கு Swiggy-யில் பிரியாணி ஆர்டர் செய்து லொகேஷன் ஷேர் பண்ணலாம். அந்தளவுக்கு மனிதனுக்குப் பாதுகாப்பையும், பயன்பாட்டையும் வழங்குகிறது இந்த ஜிபிஎஸ்.

தற்போது தயாரிக்கப்படும் அத்தனை கார்களிலும் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டே வருகின்றன. இவை Hutch நாய்க்குட்டி போல உங்களை டர்ன்-பை-டர்ன் சரியாக வழிகாட்டவும், பயண நேரத்தைத் திட்டமிடவும், நிகழ்நேர டிராஃபிக் விவரங்களைக் கூறி நம்மை எச்சரிக்கவும் செய்கின்றன.

இன்று ஜிபிஎஸ் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு உள்ளேயே நுழைந்துவிட்டது. ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் (GPS-enabled home security systems), வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் விர்ச்சுவல் ஜியோஃபென்ஸ்கள், GPS ஸ்மார்ட்போன்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அமேசான் எக்கோ ஷோ போன்ற ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளைக் கண்காணிக்கும் GPS டிராக்கர்கள் என ஜிபிஎஸ் இல்லாத வாழ்க்கையே இன்று நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலை உருவாக்கிவிட்டது. அது மட்டுமா, உங்களின் ‘Location Data’ என்பது கூகுள், அமேசான், ஃபேஸ்புக் போன்ற டெக் நிறுவனங்களுக்கு எத்தனை ‘அவசியமானது’ என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

GPS

ஜிபிஎஸ் நவீனக் காலத்தில் முதன்மை வழிசெலுத்தல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டாலும், பாரம்பரிய காம்பஸ் திசைக்காட்டிகள் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் சிக்னல் கைவிடும் நேரங்களில் எல்லாம் காம்பஸ் திசைக்காட்டிகள்தான் கைகொடுக்கின்றன.

மனித ஆய்வு வரலாற்றில் ஓர் அசாத்திய வெற்றி இந்தத் திசைக்காட்டியின் கண்டுபிடிப்பு. அன்று லோடெஸ்டோன்களைக் கண்டுபிடித்த சீனர்களோ, பின்னர் அதை காம்பஸ்ஸாக மெருகூட்டிய ஐரோப்பியர்களோ கூட நினைத்திருக்க மாட்டார்கள் தாம் உருவாக்கும் இந்த எளிய சாதனம் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த உலகத்தையே ‘வழிநடத்தப் போகிறது’ என்று!

ஒரு காலத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து தன் பயணத்தைத் தொடங்கிய மனிதன் இன்று ஜிபிஎஸ் எனும் வடக்கு நட்சத்திரத்தின் துணையோடு பறந்துகொண்டு இருக்கிறான்.

– Euro Tech Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.