புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 77வது சுதந்திர தின விழா, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று கொண்டாடப்பட்டது.
காலை 8:55 மணிக்கு முதல்வர் ரங்கசாமி வந்தார். அவரை, தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் வரவேற்றனர்.
விழா மேடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், சுதந்திர தின விழா உரையாற்றினார்.
ஆயுதப்படை, போக்குவரத்து, சட்டம் – ஒழுங்கு ஆண்கள் மற்றும் பெண்கள், ஐ.ஆர்.பி.என்., போலீஸ் இசைக்குழு, ஊர்காவல்படை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, தீயணைப்பு படை, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் சாரண மாணவ – மாணவியர் மற்றும் பள்ளி மாணவ – மாணவியிரின் மிடுக்கான அணிவகுப்பு நடந்தது.
அசாம், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த கலைக்குழுவினரின் பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவை முடித்து கொண்டு, காலை 11:05 மணிக்கு முதல்வர் ரங்கசாமி சட்டசபை வந்தார். சட்டசபை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்