பெங்களூரு : பெங்களூரில் நடந்த சுதந்திர தின விழாவில், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியும்; மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியும், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கர்நாடக அரசு சார்பில், நாட்டின் 77வது சுதந்திர தின விழா, பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது ராணுவத்தினரின் பேண்ட் இசை குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். முதல்வர், திறந்த ஜீப்பில் சென்று மக்களுக்கு சுதந்திர தின விழா வாழ்த்து கூறி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின், 20 பக்கங்கள் அடங்கிய தன் சுதந்திர தின உரையை, காலை 9:08 மணிக்கு வாசிக்க ஆரம்பித்து, 9:41 மணிக்கு முடித்தார்.
பெரும்பாலும் காங்கிரஸ் அரசின் சாதனைகள் தான் உரையில் இடம்பெற்றிருந்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல அம்சங்களை தெரிவித்தார்.
கே.எஸ்.ஆர்.பி., – சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, போலீஸ், சாரணர் இயக்கம், ராணுவம், மாணவர்கள், போலீஸ் மோப்ப நாய் படை உட்பட, 38 குழுக்கள் அணிவகுப்பில் வீர நடை போட்டன.
அதன்பின், நாட்டு பற்றை உணர்த்தும் வகையில் மாணவ – மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வீர வணக்கம் செலுத்தும் ‘வீர நமனா’ என்ற பெயரில் சாரக்கி பப்ளிக் பள்ளியின் 750 மாணவர்களின் நடன நிகழ்ச்சி, அனைவரையும் கவர்ந்தது.
சிக்கபல்லாபூரின் விதுராஸ்வதாவில் 1938ல் நடந்த சுதந்திர போராட்டத்தில், ஆங்கிலேயர்களால் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை, வீரபூமி விதுராஸ்வதா கொடி சத்தியாகிரகம் என்ற பெயரில், ஹாரோஹள்ளி பெங்களூரு மாநகராட்சி பி.யு.சி., கல்லுாரியின் 700 மாணவர்கள் தத்ரூபமாக நடித்து, கண் முன்னே கொண்டு வந்தனர்.
இச்சம்பவம், ‘தெற்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை’ என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறது.
சுதந்திர தின விழாவில் முதன் முறையாக, பெலகாவி பைலஹொங்களா கித்துார் ராணி சென்னம்மா பள்ளியின் 50 மாணவர்கள், ‘ரோப் ஸ்கிப்பிங்’ கலையை செய்து காண்பித்தனர்.
ராணுவத்தின் எம்.இ.ஜி., பிரிவினரின் கேரளா களறிபட்டு தற்காப்பு கலை; ஏ.எஸ்.சி., பிரிவின் டென்ட் பெக்கிங் கலை; பைக் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
இறுதியில் சிறப்பாக அணிவகுப்பு நடத்தியோர், கலை நிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு மாநில அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
ரூ.3,400 கோடியில் குடிநீர் திட்டம்
சுதந்திர தின விழாவில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:சுதந்திரம் என்பது எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நம் முன்னோரின் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அமைதியான சமூகம் இருந்தால் மட்டுமே, வளர்ச்சி சாத்தியமாகும். இதை நன்கு அறிந்துள்ளதால், துஷ்டர்களின் விளையாட்டு நீண்ட காலம் நடக்காது என்பதை கர்நாடக மக்கள் உணர்த்தி உள்ளனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நம் வளத்தை கொண்டு சென்றனர். இப்போது, சில பெரிய முதலீட்டாளர்களிடம் அந்த வளம் சேர்ந்துள்ளன. அப்படியானால் வளர்ச்சி சாத்தியமாகுமா. எனவே தான் மக்கள் செலுத்தியவற்றை, அவர்களுக்கே வழங்கும் ஐந்து இலவச வாக்குறுதி திட்டங்களை கொண்டு வந்தோம்.அரசின் அந்த திட்டங்கள், ஜாதி, மதம், இன பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படுகின்றன. இதனால், 1.30 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. சில ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த கிருஷி பாக்யா, அனுகிரஹ திட்டம், வித்யாஸ்ரீ, சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.நகரின் ஏரிகள் உட்பட நீர் நிலைகள் பாதுகாத்து, மக்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்க 3,400 கோடி ரூபாயில் புதிய திட்டம் தீட்டப்படும். கர்நாடக வளர்ச்சிக்கு புதிய யுத்திகளை பயன்படுத்துவோம். நேர்மையாக உழைத்து, பாதுகாப்பான இந்தியாவையும், கர்நாடகாவையும் உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்