திஷா (Disha) என்பது மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவாகும். மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர்
தலைமை வகித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா
மத்திய – மாநில அரசு கைகோர்ப்பு
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை தொடர்ந்து கண்காணித்தால் தான் தொய்வின்றி நிறைவு பெறும். அதற்காக தான் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
கடந்த நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வங்கிகள் மூலம் கடன் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. நடப்பாண்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்க 3.30 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன புதிய அறிவிப்புகள்
சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க ”மதி எக்ஸ்பிரஸ்” என்ற வாகனங்கள் வழங்கப்படும்இதற்காக ”மதி சந்தை” என்ற இணையதளம் உருவாக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை தங்களுக்குள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் மாதந்தோறும் ”வாங்குவோர் – விற்போர் சந்திப்பு” நடத்தப்படும்.முக்கிய சுற்றுலா தலங்களில் ”மதி அங்காடிகள்” நிறுவப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் ”மதி திணை உணவகங்கள்” ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்களிப்பை செலுத்தும் வகையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
புதிய சாதனை
கடந்த இரண்டு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டு, 47 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளோம். இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் உரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
விரைவாக புறப்பட்ட ஸ்டாலின்
அதை கேட்டறிந்து அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு வித்திடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேறு வேலை காரணமாக இந்த கூட்டத்தில் இருந்து பாதியிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றது கவனிக்கத்தக்கது.