‘மாயா’ இயங்குதளத்துக்கு மாறும் பாதுகாப்பு அமைச்சகம்: வின்டோஸுக்கு முடிவுரை

சென்னை: சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் விண்டோஸ் இயங்குதளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கணினிகளைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் ஆறு மாத காலத்தில் உள்நாட்டைச் சேர்ந்த அரசு முகமை இந்த இயங்குதளத்தை வடிவமைத்துள்ளது. இது Ubuntu எனப்படும் ஓபன் சோர்ஸ் மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். இப்போதைக்கு இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினிகளில் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று (ஆகஸ்ட் 15) முதல் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்.

அதே நேரத்தில் முப்படைகளின் கணினிகளில் இதன் பயன்பாடு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை பயன்படுத்த கடற்படை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல். ராணுவம் மற்றும் விமானப்படை இதன் செயல்பாட்டை பார்வையிட்டு வருவதாகவும் தெரிகிறது.

விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மாயாவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. அதனால் இதனை பயனர்கள் சிரமமின்றி கையாள முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதலை இந்த இயங்குதளம் தடுக்கும் வல்லமை கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ‘சக்ரவியூக்’ எனும் பாதுகாப்பு முறையின் சப்போர்ட் இதற்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.