சென்னை : ராஜராஜ சோழனின் புதிய ஓவியத்தை, சோழ சேனை அமைப்பு வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த தகவல் வெளியானது முதல், ராஜராஜன் பற்றிய தகவல்களும், பல்வேறு படங்களும் வெளியாகி வருகின்றன.
இதில் பல படங்கள், குத்துச்சண்டை வீரர்களைப் போல ஆஜானுபாகுவான உடலுடன், வெள்ளைத் தோலுடன் உள்ளதுபோல் வெளியாயின. இது, வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பொதுவான ஆட்சி
இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவில் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தார அறையில், ராஜராஜன் காலத்தில் வரையப்பட்ட ராஜராஜன் ஓவியம் மற்றும் குஜராத் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் சிலை மற்றும் செப்பேடு, மானம்பாடி கோவில் சிற்பம் ஆகியவற்றின் அடிப்படையில், புதிதாக ராஜராஜ சோழனின் ஓவியத்தை, சோழ சேனை அமைப்பு, நேற்று முன்தினம் வெளியிட்டது.
திருச்சி மாவட்டம், சோழமாதேவி கோவிலில், தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தெய்வநாயகம், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான மு.ராஜேந்திரன் ஆகியோர், இந்த ஓவியத்தை வெளியிட்டனர்.
இதுகுறித்து, சோழ சேனை அமைப்பின் தலைவர் அருண்மொழி கூறியதாவது:
ராஜராஜ சோழன் தான் முதன்முதலில் தமிழகத்தை விரிவுபடுத்திய அரசன்.
அவர், தேசப்பற்றும், தெய்வப்பற்றும் நிறைந்தவராகவும், அனைவருக்கும் பொதுவான ஆட்சி செய்தவராகவும் இருந்துள்ளார். அவர் குறித்த தவறான தகவல்களை தடுக்கும் எண்ணத்துடன் தான், இந்த படம் வரையப்பட்டது.
இந்த படத்தை, ராஜராஜன் மன்னராக பதவியேற்ற ஆடி புனர்பூச நாளில் வெளியிட்டு உள்ளோம்.
தமிழர்களின் உயரம்
இதை, ஓவியர்களான பிரேம் டாவின்சி, தெய்வா, அருண்மொழி ஆகியோர் உருவாக்கினர்.
இந்த ஓவியத்தில், தமிழர்களின் உயரத்துடனும், தோல் நிறத்துடனும் ராஜராஜன் உள்ளார்.
அவர் மார்பில் விழுப்புண்களும், கையில் சோழர்களின் மலரான அத்திப்பூவும் உள்ளது. காலில் வீரக்கழல் அணிந்துள்ளார். சன்னவீரம் அணிந்த மார்பில் முப்புரி நுால் உள்ளது.
அத்துடன் மிகப்பெரிய கொண்டையிட்டு, மீசை, சிறுதாடி வளர்த்துள்ளார். காது வளர்க்கப்பட்டு நீண்டுள்ளது.
இவ்வாறு பல நுண்ணிய அடையாளங்களுடன், இந்த படம் வரையப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்