வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் நடந்த ராமகதை உபன்யாசத்தில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். அங்கு அவர் கூறுகையில், நான் இங்கு பிரதமராக வரவில்லை. ஹிந்துவாக வந்துள்ளேன் என்றார்.
ஆன்மிக தலைவரான மொராரி பாபு, கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். கடந்த 12ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி, வரும் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசினார். தனது பேச்சை துவக்கிய போதும், நிறைவு செய்யும் போதும் ரிஷி சுனக் ‛ ஜெய் ஸ்ரீராம்’ எனக்கூறினார்.
அங்கு ரிஷி சுனக் பேசியதாவது: இந்திய சுதந்திர தினத்தன்று, கேம்ப்ரிட்ஜ் பல்கலை.,யில் மொராரி பாபுயின் ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்றது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாக உள்ளது. என்னை பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.
மொராரி பாபுவுக்கு பின்னால், தங்க நிறத்திலான ஹனுமன் படம் உள்ளது போல், எனது அலுவலகத்திலும் எனது மேஜை மீதும் விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளார் என்பதை பெருமையாக கருதுகிறேன்.
பிரிட்டன் நாட்டவராக இருப்பதையும், ஹிந்துவாக இருப்பதிலும் பெருமையாக கருதுகிறேன். சிறு வயதில் சகோதரருடன் சேர்ந்து கோயில்களுக்கு சென்றுள்ளேன். மொராரி பாபு பேசும், ராமாயணத்தையும், பகவத் கீதையையும் மற்றும் ஹனுமன் சாலீசாவையும் நினைவுகூர்ந்து இங்கிருந்து கிளம்புகிறேன்.
என்னை பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும், கடவுள் ராமர் எப்போதும் உத்வேகமாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement