ரூ.57,000 கோடியில் PM இ-பஸ் சேவா திட்டம்… நாடு முழுவதும் 10,000 புது எலக்ட்ரிக் பேருந்துகள்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப் போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் மத்திய அரசும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் எலக்ட்ரிக் பேருந்துகள் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் PM e-bus sewa எனப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 57,613 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பேருந்துகளை பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தில் இரண்டு முக்கியமான இலக்குகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, நகர பேருந்து சேவையை விரிவுபடுத்துவது. இரண்டாவது, சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் நகர்ப்புற சேவையை அளிப்பது.

எலக்ட்ரிக் பேருந்து சேவை

இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி செய்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மத்திய அரசின் முடிவு இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை வெகுவாக அதிகரிக்கும். பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான இந்தியாவின் பாதையும் முக்கியத்துவம் பெறும் என்று கூறினார்.

எந்தெந்த நகரங்களில்?

மேலும் பேசுகையில் பிரதம மந்திரியின் இ-பஸ் சேவா திட்டமானது 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும். குறிப்பாக வரைமுறை செய்யப்படாத பேருந்து சேவைகள் இருக்கும் நகரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். மேலும் யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள், மலை பிரதேசங்கள் அடங்கிய மாநிலங்கள் ஆகியவற்றில் முதல்கட்டமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை ரத்து… ஆகஸ்ட் 17 முதல்… எத்தனை நாட்கள், எந்தெந்த வழித்தடங்களில்?

அரசு, தனியார் பங்களிப்பு

இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் PPP (Public Private Partnership) அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து பணிமனைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாசில்லா போக்குவரத்து

மேலும் கிரீன் நகர்ப்புற சேவைகளில் எலக்ட்ரிக் பேருந்துகள் உடன், இ-பைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்தடம் ஏற்படுத்துதல் ஆகியவையும் மேற்கொள்ளப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதமர் மந்திரியின் இ-பஸ் சேவா திட்டமானது முழு வீச்சில் பயன்பாட்டில் இருக்கும். இதன்மூலம் 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.