வெகு காலத்திற்கு பிறகு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் ஹீரோவாக நடிக்க முன் வந்திருக்கிறார் கவுண்டமணி. `இனிமேல் சினிமா வேண்டாம் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்’ என்று இருந்தவர், இயக்குநர் சாய்ராஜகோபால் சொன்ன கதையில் உற்சாகமாகிவிட்டார்.
அதற்காக ஸ்பெஷலாக, தீவிரமாக தயாரிப்பில் இறங்கி தயாராகிவிட்டார். சமீபத்தில், ட்ரிம்மாக வேட்டி சட்டையில் போட்டோ செஷனுக்கு ஸ்டூடியோவுக்கு வந்தபோது மொத்த பேரும் எட்டிப் பார்த்தது நடந்தது.
`ஒத்த ஓட்டு முத்தையா’வை இரண்டு ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படம் ஜெயித்தால் அடுத்தடுத்து படம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் கவுண்டமணி. படத்திற்கான ஸ்கிரிப்ட் புக், வசனங்களை முன்கூட்டியே கவுண்டமணியிடம் வாசித்துக் காண்பித்து விட்டார் இயக்குநர். அவருடைய கரியரில் இப்படி ஸ்கிரிப்டை வாசித்துக் காட்டியது நடந்ததே இல்லையாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/F3jEVTVakAAZBMs.jpeg)
நல்லாத்தான் இருக்கு இந்த விஷயம். அந்த காலத்துலயும் இதே மாதிரி கேட்டுப் பார்த்து வசனங்களை கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம் என்று இப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறார். பொங்கல் கழித்து படத்தை வெளியிடலாமா அல்லது வருடக்கடைசியில் வெளியிட்டு விடலாமா என்று ஆலோசனையில் இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிப்பதால் இதில் சின்ன கேரக்டர்களில் அவருடைய நெருக்கமான, அவர் மீது அன்பு கொண்ட சத்யராஜ், சந்தானம் போன்றவர்களை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியா இருக்கிறது. அவர்களாக நடிக்க விருப்பப்பட்டால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென கவுண்டமணி சொல்லிவிட்டாராம். படத்தில் நிஜ சத்யராஜ், சந்தானமாக இருவரும் வந்து போவது மாதிரியான ஐடியாக்கள் இப்போது உதயமாகி இருக்கின்றது என்கிறார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/F3jEVxeaIAAB2GQ.jpeg)
படம் முழுவதும் காமெடியும், கொஞ்சமாக சென்டிமென்ட்டும் சேர்ந்து பின்னப்பட்ட கதை தான் என்கிறார்கள். எப்போதுமே கவுண்டமணி கதை பிடித்து விட்டு கால்ஷுட் கொடுத்து விட்டால் டைரக்டருக்கு படத்தை எடுப்பதில் எந்தத் தொந்தரவும் தர மாட்டார். அப்படியே இப்பொழுதிலிருந்தே கவுண்டமணியும், இயக்குநர் சாய்ராஜகோபாலும் தினமும் சந்தித்து மெருகேற்றுவதால் படத்தைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கி இருக்கிறதாம். விரைவில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’வாக கவுண்டமணியின் அட்ராசிட்டியை ரசிக்கலாம்.
மீண்டும் கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!