அரிசி கொம்பன் யானையை பிடிக்க ரூ.21.38 லட்சம் கேரள வனத்துறை தகவல் | Rs 21.38 lakhs to catch the rice komban elephant Kerala forest department informs

மூணாறு:அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ரூ.21.38 லட்சம் செலவிடப்பட்டதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.

கேரளா இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த 5 ஆண்டுகளில் 8 பேரை கொன்றது. வீடுகள், ரேஷன் கடைகள் உள்பட 83 கட்டடங்களை சேதப்படுத்தியது. அதனால் யானையை பிடிக்க ‘ மிஷன் அரிசி கொம்பன்’ என்ற திட்டத்தை வனத்துறையினர் செயல்படுத்தினர்.

அதன்படி சின்னக்கானல் அருகே சிமென்ட் பாலம் பகுதியில் ஏப்.29ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் வனத்தில் ஏப்.30ல் அதிகாலையில் விட்டனர். அதற்கு ரூ.21.38 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வனத்துறையினர் தெரிவித்தனர்.

முதலில் யானையை பிடித்து கோடநாடு யானைகள் வளர்ப்பு மையத்தில் விட ஏற்பாடு நடந்தது. அதற்கு கூண்டு அமைக்க மூணாறில் இருந்து யூகாலிப்டஸ் மரங்களை முறித்து மரத்தடிகள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் ரூ.3.65 லட்சம் செலவிடப்பட்டது.

ஆனால் கோடநாடு கொண்டு செல்ல கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் கூண்டு அமைக்க செலவிடப்பட்ட தொகை வீணானது.

அதன்பிறகு பரப்பிகுளம் வனத்தில் விட முடிவு செய்யப்பட்டு வாகனம் செல்ல ரோடு அமைக்கப்பட்டது. அங்கு யானையை விட எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முடிவை வனத்துறையினர் கைவிட்டனர். பின்னர் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் வனத்தில் விட முடிவு செய்யப்பட்டு வாகனம் செல்வதற்கு வசதியாக ரோடு அமைக்கப்பட்டது. அந்த செலவுகள் தற்போது வனத்துறை வெளியிட்ட செலவு தொகையில் சேர்க்கப்படவில்லை.

தற்போது அரிசி கொம்பன் தமிழகத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் வனத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.