வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து, ‘லேண்டர்’ சாதனம் இன்று( ஆக.,17) பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலம், ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இதன் செயல்பாடுகளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், நிலவை சுற்றி வந்தது. சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட துாரம் குறைப்பு முயற்சி நேற்று வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள, ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து, ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்க உள்ள சாதனம் இன்று பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சந்திரயான் -3 உந்து சக்தி கலனில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. விண்கலத்தின் உந்துவிசை கலன் மற்றும் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டது. நாளை மாலை 4:00 மணிக்கு லேண்டரின் உயரம் குறைக்கப்படும் எனக்கூறியுள்ளது.
சந்திரயான் 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ இணைந்து கண்காணிக்கிறது.
23ல் நிலவில் தரையிறக்கம்
அதன்பின், சந்திரயான் – 3 விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். அதே நேரத்தில், லேண்டர் சாதனத்தை, நிலவின் தென் துருவத்தில், 23ம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனத்துக்குள், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வாகனம் இடம் பெற்று உள்ளது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய உடன், ரோவர் வாகனம், நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதுவரை அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement