மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தனது சாதனைகளை உலகளாவிய தெற்கு நாடுகளை நோக்கி திருப்ப சீனா சர்வதேச பொருளாதார முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது.
சீனாவின் குன்மிங்கில் நேற்று (16) ஆரம்பமான சீன வர்த்தக அமைச்சும் யுனான் மாநில அரசும் இணைந்து ஏற்பாடு செய்த 7ஆவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (RECP) உறுப்பு நாடுகள் உட்பட 60 நாடுகள் பங்கேற்கின்றன.
இக்கண்காட்சியில் 15 கண்காட்சி அரங்குகள் உள்ளன, இதில் உயிரியல் மருத்துவம் மற்றும் சுகாதார அரங்கு, வள பொருளாதார அரங்கு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அரங்கு ஆகியவை அடங்கும்.150,000 சதுர மீட்டர் மொத்த பரப்பளவில் இடம்பெறும் இக்கண்காட்சி நேரடியாகவும் இணையவழியாகவும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்படுவது விசேட அம்சமாகும். ’பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு’ என்ற தொனிப்பொருளில் இக்கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாம் ஒன்றிணைவதற்கான இந்த வாய்ப்பு எமது இருதரப்பு உறவுகளில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கையும் சீனாவும் பல நூற்றாண்டுகளாக நட்புறவுடன் பிணைந்துள்ளன. இந்த வரலாற்று உறவானது கடல்சார் பட்டுப்பாதையில் செழிப்பான வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் கலாசாரம் மற்றும் அறிவு என்ற விரிந்த ஒத்துழைப்பினால் போஷிக்கப்பட்டதாகும்.
எமது இரு நாடுகளும் சுமார் 66 ஆண்டுகளாக சிறந்த இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றன. நாங்கள் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்பே, மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்யத் தயங்கிய சந்தர்ப்பத்தில் சீனாவும் இலங்கையும் இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அப்போதிருந்து, சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் நல்ல நண்பர்களாகக் கருதுகின்றன, மேலும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு விசேட உறவு உள்ளது. சவாலான காலகட்டங்களில் தொடர்ந்தும் எம்முடன் நின்று சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் தளராத ஆதரவுக்கு இலங்கையர்களான நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த நான்கு தசாப்தங்களில், சீனா சுமார் 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது, இது உலகளாவிய வறுமைக் குறைப்பில் 75% க்கும் அதிகமாக உள்ளது. உண்மையில் இது ஒரு பெரிய சாதனை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அவசியமான கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் சீனா மிகவும் தேவையான ஆதரவை வழங்கியுள்ளமையை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் எதிர்காலத்தில் இலங்கையின் பரந்த பொருளாதாரக் கொள்கையில் சீனா தொடர்ந்து ஒத்துழைப்பையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் என்று நம்புகிறோம்.
கடந்த காலங்களில் இலங்கை அனுபவித்த சமூக பொருளாதார குழப்பங்களை நிவர்த்தி செய்வதற்காக சீனா இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக சினோபார்ம் தடுப்பூசி, முகக்கவசங்கள், கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள் மற்றும் ஏனைய சுகாதார உபகரணங்களை அனுப்பிவைத்ததன் மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை சீனா துரிதப்படுத்தியது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சீனாவின் முதலீடுகள் மிகவும் முக்கியமானவை, மேலும் சீனாவிடமிருந்து இலங்கைக்கு அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்.
இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய நன்மையின் பயனை அறிந்து, கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் என்பவற்றின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானதாகும். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த நீண்ட கால உறவு மேலும் வலுப்பெறட்டுமாக!
இந்தோனேசியா, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளின் உப ஜனாதிபதிகள், வியட்நாம் பிரதிப் பிரதமர், மாலைதீவு வர்த்தக அமைச்சர், இலங்கையின் இராஜாங்க அமைச்சர்கள் தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர, கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல நாடுகளின் அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு