காவிரி விவகாரம் மீண்டும் ஒருமுறை பஞ்சாயத்திற்கு வந்துள்ளது. தமிழகம் – கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் தண்ணீருக்காக மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை மூலம் நல்ல மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ளன. இருப்பினும் தமிழகத்திற்கு தேவையான நீரை தருவதில் முரண்டு பிடித்து வருகிறது.
திருப்பூரில் விவசாயி ஒருவருக்கு சுமார் ரூ.3 லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பு
தென்மேற்கு பருவமழை
தங்கள் மாநில விவசாயிகளின் நலனுக்காக சேமித்து வைத்து வருவதாகவும், பருவமழை கடந்த சில வாரங்களாக ஏமாற்றம் அளித்திருப்பதாகவும் கர்நாடகா விளக்கம் அளித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி நீருக்காக டெல்லிக்கு நடையாய் நடந்துள்ளது. இதற்கான முயற்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஈடுபட்டார். பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர்
கடிதம் எழுதினார்.
காவிரி விவகாரம்
டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழகத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தரப்பு கறார் காட்டியதால் தமிழகம் வெளிநடப்பு செய்தது எல்லாம் வேற லெவல் சம்பவங்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டியதாக தகவல் வெளியானது. இதன் விளைவாக தான் கர்நாடகா 10 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது எனச் சுட்டி காட்டியுள்ளாராம்.
தமிழக அரசு முயற்சி
ஆனால் முடிந்தவரை காவிரி நீரை திறந்து விடுகிறோம் என்று சமாளிக்க ஆரம்பித்தது கர்நாடகா அரசு. உடனே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதனால் காவிரி விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ளது முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. தேசிய அளவில் இந்த கூட்டணியில் தான் திமுக இருக்கிறது. எனவே மாநில உரிமைகளை பெறுவது எளிது என்ற பார்வை நிலவினாலும், கள நிலவரம் அப்படி இல்லை.
அடம் பிடிக்கும் டிகேஎஸ்
அனைவரும் தங்கள் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தான் அதிக கவனம் செலுத்துவர். அதில் கர்நாடகாவும் விதிவிலக்கல்ல. குறிப்பாக அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் காவிரி விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து வருகிறார். இந்த சூழலில் தான் 10 டி.எம்.சி காவிரி நீரை திறந்துவிட முடிவு செய்திருப்பதாக தெரிவித்து ஆறுதல் அளித்தார்.
பற்றாக்குறை நீர்
இருப்பினும் போதிய அளவு தண்ணீரி பெறுவதில் பற்றாக்குறை இருக்கிறது. உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்பின் படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி அளவிற்கு தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். இதன் பயனை முழுமையாக தமிழகம் அடைய வேண்டும். ஆனால் கடந்த இரு மாதங்களிலேயே 28.8 டி.எம்.சி அளவிற்கு கர்நாடகா பற்றாக்குறை வைத்திருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இவற்றை எல்லாம் கணக்கு வைத்து உரிய நீரை வழங்க வேண்டும் என்று தமிழகம் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல் கர்நாடகாவில் இருந்து வந்திருக்கிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 12,500 கன அடியாக உயர்ந்துள்ளதாம். நேற்றைய தினம் 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 2,500 கன அடி நீர் அதிகரித்துள்ளது.