மும்பை: அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த சீன பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட உடன், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அந்த பயணி மீட்கப்பட்டார்.
சீனாவில் இருந்து ஐக்கிய அரபு எமீரேட்சிற்கு, பனாமா நாட்டு கொடியுடன் ‛எம்வி டாங் பாங் கன் டன்’ என்ற ஆராய்ச்சி கப்பல் பயணித்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் பயணம் செய்த யின் வெய்ஜியாங் என்ற சீனருக்கு மாரடைப்பும், அதிக ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இது தொடர்பாக மும்பையில் உள்ள கடலோர பாதுகாப்பு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அவருக்கு டெலி கான்பரன்ஸ் வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது மட்டுமே, அவரை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் எம்கே மூலம் யின் வெய்ஜியாங் மீட்கப்பட்டு, முதலுதவி அளித்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement