சென்னை: நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சாதிய வன்முறைச் சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி – அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 9-ம் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மாவட்ட வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து, நாங்குநேரி சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்ராசு, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், இந்த அறிக்கையுடன் சில பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 17 வயது மாணவரை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலில் மாணவருடன் சேர்ந்து காயமடைந்த அவரது சகோதரியையும் இந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர், பொதுத் தேர்வெழுதப் போகும் 12-ம் வகுப்பு படிப்பவர் என்பதால், அவரை மனதளவில் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.