மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா? அந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது?

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.

ஸ்டாலின் போட்ட உத்தரவு!செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிலையில் அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு சவாலான பணி!ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற வேண்டியதிருப்பதால், விண்ணப்பங்களை சரி பார்த்தல், தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல், கள ஆய்வு எடுத்தல், தகுதியானவர்கள் யாரும் விடுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் என பல பணிகள் உள்ளன. மாவட்ட வாரியாக, வட்ட வாரியாக ஊர்கள் வாரியாக பணிகள் பிரித்து நடைபெற்றாலும் தகுதியான ஒரு கோடி பேரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலான பணி. இதில் சிறு தவறுகள் ஏற்பட்டாலும் பெரியளவில் விமர்சனங்கள் எழும் வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை – எழும் சந்தேகங்கள்!திமுக தேர்தல் அறிக்கையில் பெரும் கவனம் ஈர்த்த இந்த திட்டம் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அமலுக்கு வருகிறது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தாலும் இந்த திட்டம் அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இது தொடர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசியுள்ளார்.
தமிழக அரசிடம் நிதி உள்ளதா?திட்டத்தின் தொடக்கப் பணிகளை சேர்க்காமல் நடப்பு ஆண்டுக்கு பயனாளர்களுக்கு மட்டும் 7ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 12ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இப்போது உள்ள நிதி நெருக்கடியில் இதை எவ்வளவு காலம் தொடர முடியும் என்பது குறித்து ஜெயரஞ்சன் மின்னம்பலம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெயரஞ்சன் சொல்வது என்ன?“தமிழ்நாட்டில் வேறெந்த திட்டத்துக்கும் இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை. பெரியளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் பிற திட்டங்களுக்கு செலவிடுவதில் தாமதம் ஏற்படலாம். கட்டாயம் இந்த திட்டத்தை தொடர்ந்து தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். நாட்டில் பெரிய பொருளாதாரம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா, அதற்கு அடுத்து தமிழ்நாடு தான். இப்போதுள்ள நிலைமையை விட அடுத்தடுத்து நமது பொருளாதாரம் மேல் நோக்கி தான் செல்லும்.

தமிழ்நாடு – உத்தரபிரதேசம் ஒப்பீடு!தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி என்றால் உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 22 கோடி. ஆனால் நாம் செலுத்தும் ஜிஎஸ்டியின் நான்கில் ஒரு பங்கை தான் அவர்கள் செலுத்துகிறார்கள். நம் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த திட்டம் தொடர்ந்து நடைபெறவே செய்யும். ஏனெனில் தமிழ்நாட்டின் வரலாறு அப்படித்தான் இருந்துள்ளது.
மதிய உணவு முதல் காலை உணவுத் திட்டம் வரை!உதாரணத்துக்கு காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றி மேம்படுத்தினார். ஆனால் அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வரும் போது அதை நிறுத்திவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ சத்துணவுடன் முட்டையை சேர்த்து வழங்கினார். அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும் ஒவ்வொருவரும் அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த தற்போது முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை – தொடர்ந்து நடைபோடும்!மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டத்தை தமிழ்நாட்டில் எந்த அரசும் நிறுத்தாமல் அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது தான் வழக்கமாக இருந்துள்ளது. எனவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதன் மூலம் மக்கள் தொடர்ந்து பயன்பெறுவார்கள்” என்று கூறியுள்ளார் ஜெயரஞ்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.