மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தரும்புரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்களை தொடங்கி வைத்தார்.
ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்ட முகாம்கள் நடைபெற்றன. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு எந்த ரேஷன் கடையில் அட்டை உள்ளதோ அங்கு சென்று தான் அதற்கு விண்ணப்பிக்க முடியும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பிறநகரங்களில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் அதில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க செல்ல முடியாமல் பல குடும்பத்தினர் வேறு ஊர்களில் இருந்தனர். இதனால் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாததால் இத்திட்டத்தில் பயனாளர்களாக இணைய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியது.
இதனால் தமிழக அரசு இரு நாள்கள் சிறப்பு முகாம்களை நடத்தி இரு முகாம்களிலும் விடுபட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. ஆனால் இரு நாள்கள் போதுமானதாக இருக்காது தொலைவில் உள்ளவர்கள் வந்து செல்ல முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அன்றைய தினம் விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.