புதுடெல்லி: மணிப்பூரில் மைத்தேயி – குகு இனத்தவர் இடையே நடந்த மோதலில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் உள்பட பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிபிஐ 53 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் இரண்டு பெண் டிஐஜி.,க்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் லவலி கட்டியார், நிர்மாலா தேவி.எஸ். என்று தெரியவந்துள்ளது. இவர்களுடன் இரண்டு எஸ்.பி.,க்கள், 6 டிஎஸ்பி.,க்கள் என மொத்தம் 29 பெண்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளையும், ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் சூறையாடப்பட்ட வழக்கையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலவரத்தின் பின்னணி: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. மணிப்பூர் இனக் கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.