மல்டிஸ்டார்ஸ் இருந்தும் தனி 'ஸ்டார்' ஆக நிரூபித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா உலகில் கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகர்களாக நடித்து பல சாதனைகளைப் புரிந்து வருபவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். ஆரம்ப காலங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்து வளர்ந்தார்கள். அதற்குப் பின் கமல்ஹாசனின் ஆலோசனைப்படி இருவரும் பிரிந்து தனித் தனி கதாநாயகர்களாக நடித்து உயர்ந்தார்கள். இருவருக்குள்ளும் போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது.

இத்தனை வருட கதாநாயக வரலாற்றில் கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் பெரும் வசூல் சாதனையைப் புரிந்தது. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, தமிழகத்தில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் முதலிடத்தைப் பெற்றது. ரஜினிகாந்த் கூட செய்யாத ஒரு சாதனை அது என கமல்ஹாசன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

அதே சமயம் அந்தப் படத்தின் வசூலில் கமல்ஹாசனுக்கு மட்டும் தனிப் பங்கில்லை, அதில் நடித்த மற்ற ஸ்டார்களுக்கும் பங்கு இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் விமர்சித்திருந்தார்கள். அது தனி ஸ்டார் படமல்ல, மல்டி ஸ்டார் படமென்றார்கள்.

'ஜெயிலர்' படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு துவங்கியபின் படத்தில் ஒவ்வொரு மொழியிலிருந்து ஒவ்வொருவராக சேர்ந்தார்கள். மலையாளத்திலிருந்து மோகன்லால், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராப், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில் ஆகியோர் படத்தில் இணைந்தார்கள். உடனே, கமல்ஹாசன் ரசிகர்கள் அதை விமர்சித்தார்கள். 'விக்ரம்' படத்தின் வசூலைப் பார்த்து பயந்த ரஜினிகாந்த் அந்தப் படத்தைப் போலவே மல்டிஸ்டார் படமாக 'ஜெயிலர்' படத்தை உருவாக்க நினைக்கிறார் என்றார்கள்.

ஆனால், படத்தைப் பார்த்த பிறகுதான் அந்த மல்டிஸ்டார்கள் அனைவருமே 'கேமியோ' ஸ்டார்களா மட்டுமே படத்தில் இடம் பெற்றார்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது நிமிட நேரக் காட்சிகளுக்கே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். படம் முழுவதும் ரஜினி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அதனால், மல்டிஸ்டார்கள் இருந்தும் தனி ஸ்டார் ஆக ரஜினிகாந்த் மட்டுமே ஜொலிக்கிறார் என அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் அந்த மல்டிஸ்டார்கள் வந்ததற்கே இவ்வளவு வசூல் என்றால், 'விக்ரம்' படம் போல அவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் 1000 கோடி வசூலை அள்ளியிருக்கும் என ஆர்ப்பரிக்கிறார்கள்.

எப்படியோ, 'ஜெயிலர்' வசூல் 'விக்ரம்' வசூலைத் தாண்டுவது நிஜம். அதன்பின் 'ஜெயிலர்' வசூலை கமல்ஹாசன் நடித்து அடுத்து வர உள்ள 'இந்தியன் 2' முறியடிக்கப் போகிறதா இல்லையா என்பதுதான் அப்போதைய சண்டையாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.