Doctor Vikatan: நிறைய கடைகளிலும் ஹோட்டல்களிலும் முடவாட்டுக்கால் சூப் என விற்கிறார்களே… அது என்ன? இது சைவமா, இதன் பலன்கள் என்ன… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்… வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
முடவாட்டுக்கால் என்பது பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு! `ஆட்டுக்கால்’, `முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ போன்ற பெயர்களால் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது.
Drynaria quercifolia என்பது முடவன் ஆட்டுக்காலின் தாவரவியல் பெயர். இதன் குடும்பம் Polypodiaceae. மலைப்பகுதிகளில் இந்தப் பெரணி தாவரம் அதிகளவில் விளைவதைப் பார்க்கலாம்.
கிலோவிற்கு நானூறு முதல் நானூற்றைம்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிழங்கை சாக்குத் துணியில் சிறிது மணல் வைத்து மூடி வைத்தால் ஆறு மாதம்வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் மலைவாசிகள். கொல்லிமலைப் பகுதியிலும், ஏற்காடு மலைப்பகுதியிலும் முடவன் ஆட்டுக்கால் சூப் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மூட்டுவலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகளுக்கு முடவன் ஆட்டுக்காலை மருந்தாக மலைப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். மலைப்பகுதி மக்களுக்கு முடவாட்டுக்கால் சூப், குளிர்கால பானமாகப் பயன்படுகிறது.
இது தாவரம் தான் என்பதால், சைவம் வகையறாவைச் சேர்ந்ததே! ஆட்டுக்கால் என்பதால் அசைவமோ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தாராளமாக இதை சூப் போல செய்து பருகலாம். தோல் பகுதியை நீக்கிவிட்டு கிழங்கைப் பயன்படுத்தலாம்.
கிழங்கை பசை போல அரைத்துக் கொண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து, சீரகம், சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு அரைத்துச் சேர்த்து சூப் செய்து அருந்தலாம். முடவாட்டுக்கால் சூப் நோய்களை நீக்குவது மட்டுமன்றி மிகவும் சுவையானதும்கூட.
சூப் மட்டுமன்றி சட்னி, துவையல் என உணவு முறையில் அடிக்கடி முடவன் ஆட்டுக்கால் கிழங்கைப் பயன்படுத்தலாம். உடலில் உள்ள முடக்குகளை நீக்கும் என்பதால் முடவாட்டுக்கால் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். கம்பளி போர்த்திய ஆட்டுக்கால் போன்ற தோற்றமுடையது.
எலும்பு அடர்த்தி குறைவு நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கமுறுக்கி, கிருமிநாசினி, உரமாக்கி போன்ற செய்கைகள் இதற்கு உண்டு என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
நேரடியாக மலைப்பகுதிகளில் முடவாட்டுக்கால் சூப்பை பருகுவதில் நம்பகத் தன்மை இருக்கிறது. ஆனால் அதுவே வியாபாரரீதியாக முடவாட்டுக்காலை அதிகளவில் விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது சரியா என்பதை சிந்திக்கவும்!
‘முடவாட்டுக்கால் கிழங்கு பொடி’ என்ற ரீதியில் விற்பனை செய்யப்படும் பொருளின் நம்பகத் தன்மையையும் சோதித்துக்கொள்வது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.