தமிழ் சினிமா வர்த்தகத்தைக் கோடிகளில் ஹிட்டடிக்க வைத்தக் காஸ்ட்லி மாஸ்டர் டைரக்டர் ஷங்கர். எப்போதும் அவர் இயக்கிய படங்களுக்காக ரசிகர்கள் சந்தோஷமாகக் காத்திருக்கிறார்கள். அவருடைய பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி இதுவரை அறிந்திராத 30 சுவாரஸ்யத் தகவல்கள் இதோ!
அபாரமான உழைப்பு, பிரமாண்ட சினிமா எடுத்து வைக்கும் கருத்துகள் எனக் கனிவுக்குக் கலரும் கோபத்துக்கு கிராபிக்ஸூமாக வெரைட்டி காட்டும் இயக்குநர் ஷங்கரின் பர்சனல் பக்கங்கள்.
-
‘குங்குமம்’ படத்தில் நடிகர் சிவாஜியின் பெயர் ஷங்கர். தனக்கு ஒரு மகன் பிறந்தால் ‘ஷங்கர்’ எனப் பெயர் வைப்பேன் எனச் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கரின் தாயார். ஆண் குழந்தையே அவருக்குப் பிறக்க அவரே ‘ஷங்கர்’ ஆனார்.
-
நடிக்க வந்தவர்தான் ஷங்கர். பாதை திசை மாற்ற சின்ன சின்ன வேடங்களில் படத்தில் நடித்தார். அதுவும் அத்தனையும் காமெடிதான். அவர் படங்களில் இப்போதும் அவசரமாய் எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். ஜாக்கிரதையாக அந்தப் புன்னகை முகத்தை அதில் பார்த்தால் உண்டு. ‘சிவாஜி’யில் தலை காட்டினார். எந்திரனில் எட்டிப் பார்த்தார். ‘இந்தியன் 2’ விலும் முகம் காட்டக்கூடும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Digital_Header__13_.png)
-
ஷூட்டிங் வருவதற்கு முன்பு என்ன ஷாட், எவ்வளவு நேரம் போகும், அதன் அளவு எவ்வளவு என்பது வரை அவ்வளவு கச்சிதமாகத் தயாராகி வருவார். அதில் பிசகியதே கிடையாது. அவரது வெற்றிக்குத் திட்டமிடலே முதல் காரணம் எனப் பலரும் சொல்வதுண்டு.
-
தினமும் காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். சின்னதாக உடற்பயிற்சி, தினசரி பத்திரிகைகள், வார இதழ்களை ஒன்றுவிடாமல் வாசித்து விடுவார். அரசியலின் மீது கூர்ந்த கவனிப்பு உண்டு.
-
யாரைப் பற்றியும் எவரிடமும் குறை சொல்ல மாட்டார். புறம் பேசுவதும் கிடையாது. குறிப்பாகப் பிற இயக்குநர்களின் படங்களைப் பற்றி விமர்சனம் செய்யமாட்டார். கடினமாகப் பேசிவிடாமல் நல்லதை மட்டுமே எங்கும் எடுத்து வைப்பார்.
-
பத்து கட்டளைகள் என்று உதவி இயக்குநர்களுக்கு சில குறிப்புகளை எடுத்து வைப்பார். அதில் உதவி இயக்குநர்கள் பட ஆக்கத்தில் உதவி செய்வதற்கான அத்தனை விஷயங்களும் அடங்கியிருக்கும். ஒரு வேலையை எப்படி ஃபாலோ செய்வது என்பதை அவரிடம் அழகாகக் கற்றுக் கொள்ளலாம்.
-
அமெரிக்காவிற்கு ‘ஜீன்ஸ்’ படப்பிடிப்புக்குப் போயிருந்த போதும் காலையில் இட்லி, மதியம் சாதம், சாம்பார், ரசம் என்றுதான் விரும்புவார். அந்தந்த நாட்டு உணவு வகைகளைச் சாப்பிட்டு சோதனை செய்ய விரும்பவே மாட்டார். முன்பு அசைவ உணவுகளில் விருப்பமுண்டு. இப்போது கணிசமாக அது குறைந்து சைவ உணவுகளை உட்கொள்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/vikatan_2020_06_c73d0bbb_7552_453a_ac3f_4c760e890b33_449811.jpg)
-
பைவ் ஸ்டார் உணவு வகைகள் எனத் தேட மாட்டார். ஜீவா பார்க்கில் ரோட்டுக் கடை இட்லி பிடிக்கும். பர்மிய அத்தோ வகை உணவு, நூடுல்ஸ் பிடிக்கும். உணவு என்றதும் அவர் சினிமாவில் செய்கிற பிரமாண்டத்திற்கு நேர் எதிராக எளிமைதான் எப்போதுமே அவரின் சாய்ஸ்!
-
டி.எம்.எஸ் குரலில் அடிக்கடி அலுவலகத்தில் பாடுவார். இன்னும் அது ஏ.ஆர்.ரஹ்மான் காதுகளுக்கு எட்டியிருக்குமா எனத் தெரியவில்லை.
-
சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் மகள்கள் ஐஸ்வர்யா, அதிதி எம்.பி.பிஎஸ் படித்து முடித்தார்கள். அதிதி சினிமாவிற்கு பிரியம் காட்டிய போது உடனே பச்சைக் கொடி காட்டினார்.
-
ஷங்கரின் ஒரே மகன் அர்ஜித் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார். அவர் இன்னொரு இயக்குநரோ அல்லது நடிகரோ… யார் கண்டார்கள்?
-
திரைக்கதை வசனத்தில் எப்போதும் சுஜாதாவைப் பிடிக்கும். அடிக்கடி அவரைக் குறிப்பிட்டு பேசுவார். அவர் இழப்பை இன்னமும் அவர் உணர்வது உண்மை.
-
சினிமாவில் அவரது நெருங்கிய நண்பர் டைரக்டர் லிங்குசாமி. கால நேரம் பார்க்காமல் இருவரும் பேசிக் கொள்வது அடிக்கடி நடக்கும்.
-
கார் பிரியர் எல்லாம் கிடையாது. ஆனால் வகை வகையான கார்கள் வைத்திருக்கிறார். நிதானமாகவே கார் ஓட்டுவார்.
-
விரலில் மனைவி போட்ட சிறு வைரக்கல் பதித்த பிளாட்டின மோதிரம் மட்டும் மின்னும். மற்றபடி நகைகளின் மீது ஈர்ப்பே கிடையாது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/930dc201-221f-4a66-ad6d-5327ffe07924.jfif.jpeg)
-
முன்பு தினமும் ஷட்டில்காக் விளையாடுவார். இப்போது ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ என அடுத்தடுத்த பட வேலைகளில் அதற்கெல்லாம் நேரமே கிடையாது.
-
துல்லியமான ஞாபக சக்தி. ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தித்தால் கூட ஒருவரின் பெயரைச் சொல்லி நலம் விசாரிப்பார்.
-
ஷங்கரிடமிருந்து 100 பேராவது உதவி இயக்குநர்களாய் இருந்து போயிருப்பார்கள். அதில் சினிமாவில் ஏ.வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், காந்தி கிருஷ்ணா, மாதேஷ், இளங்கண்ணன், கார்த்தி, ஹோசிமின், வசந்தபாலன், அட்லி என இன்னமும் தொடர்ந்து சினிமாவில் மிளிர்கிறார்கள்.
-
அடுத்தடுத்த வீடுகளில் சூர்யா, கார்த்தி என முன்பு இருந்தாலும் ஷங்கர் படங்களில் ஏனோ அவர்கள் நடிக்கவேயில்லை. ஆச்சரியம்தான்!
-
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சென்னையில் ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்து இருக்கிறார். சினிமாவிற்கு முன்பு நாடகங்களின் நடித்த அனுபவம் நிறைய உண்டு. அதிலும் கூட நகைச்சுவை வேடம்தான் போடுவார்.
-
ஷங்கரின் ஆல் டைம் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் கடைகளுக்குச் சென்று தனக்கென ஆடைகள் எடுத்ததேயில்லை. விழாக்களில் கறுப்பு பேண்ட், சூட்டையே அதிகம் விரும்புவார்.
-
அவரது முதல் படமாக எடுக்க நினைத்த ‘அழகிய குயிலே’ இன்னும் ஸ்கிரிப்ட் அளவிலேயே நிற்கிறது. எடுக்கத்தான் நினைக்கிறார், ஆனால், பிரமாண்டங்களே கைக்கு வருகின்றன.
-
நல்ல நேரம், நல்ல நாள், கெட்ட நேரம் குறித்து கவனத்தில் வைக்கமாட்டார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_6859.jpg)
-
ஷங்கர் பயங்கரமான பன்ச்சுவல் பார்ட்டி. காலை 6 மணிக்கு சூட்டிங் என்றால் 5.30 மணிக்கே அவரை ஸ்பாட்டில் பார்க்க முடியும்.
-
முறைப்படி சங்கீதம் தெரியும். அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்.
-
சூட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பு, வேடிக்கையெல்லாம் கிடையாது. யாராவது கோபமூட்டினால் கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து மறைந்திருப்பார்.
-
உதவி இயக்குநர்களுக்கு வேண்டிய வசதிகள், சம்பளம், டுவீலர் என அனைத்தையும் செய்து கொடுத்துவிடுகிற பண்பாளர்.
-
‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ அவருக்குப் பிடித்தப் படம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பார்ப்பதுண்டு.
-
கைக்கடிகாரங்கள் பிடிக்கும். அவற்றை சேகரிக்கிற பழக்கம் உண்டு.
-
ஆகஸ்ட் 17, அவரின் பிறந்தநாள் அன்று வீடுதான் அவரது ஹாலிடே ஸ்பாட்.