“என் சொத்து, சம்பாத்தியம் எல்லாமே மதுரை மக்களுக்குத்தான். அதே நேரம் என்னை ஏமாற்றி யாரும் பணம் பிடுங்க முடியாது” கணீரென்று பேசுகிறார் பெரியவர் ராஜேந்திரன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230817_WA0019.jpg)
நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் அல்ல; மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்க ரூ.1 கோடியே 81 லட்சத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் வாழ்ந்து வந்த பெரியவர் ராஜேந்திரனின் உன்னதச் செயல் தெரிந்து அனைவரும் அவரை வாழ்த்தி வணங்கி வருகிறார்கள்.
மதுரை தத்தனேரியில் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் தொழிற்கூடத்தை நடத்தி வருகிறார் ராஜேந்திரன். இவர் சமீபத்தில் கைலாசபுரத்திலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள், சமையல்கூடம், கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ 71 லட்சம் கொடுத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேலும் விசாரித்தபோது இது மட்டுமல்ல 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி திருவிக மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள் கட்டுவதற்கும், பல்வேறு தேவைகளுக்காகவும் ரூ 1 கோடியே 10 லட்சம் கொடுத்திருக்கிறார், இன்னும் பல அரசுப்பள்ளிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230817_WA0020.jpg)
அவர் செய்கிற உதவிகள் குறித்து யாரிடமும் சொன்னதில்லை. புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார்தான், மாநகராட்சி பள்ளிகளுக்கு அவர் உதவி செய்த விவரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உதவி செய்துவிட்டு விளம்பரம் செய்துகொள்ளாத இப்படியொரு நன்கொடையாளரை கௌரவிக்க வேண்டாமா, என்று பெரியவர் ராஜேந்திரனுக்கு மரியாதை செய்தார். அதன்பின்புதான் பெரியவர் ராஜேந்திரனை எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் ” என்றனர்.
சமீபத்தில் தான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு ரூ 20 லட்சம் வழங்கிய பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பெரியவர் ராஜேந்திரனைப்பற்றி அறிந்து நேரில் சந்தித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவரை அழைத்து பாராட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜேந்திரனை அழைத்து கௌரவித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230817_WA0021.jpg)
“இதெல்லாம் எதுக்குங்க… நான் பாட்டுக்கு ஓரமா இருந்து என்னால முடிஞ்சதை பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று தன்னுடைய திருப்பதி விலாஸ் வத்தல் தொழில் கூடத்தில் இருந்தவரை சந்தித்து விகடன் சார்பில் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.
“சின்ன வயசுல காலணாவுக்கு ஆனந்த விகடனை வாங்கிப் படிச்சிருக்கேன். பள்ளிக்கூடத்துக்கு அதிகம் போகலன்னாலும் எல்லா பொஸ்தகத்தையும் வாங்கிப் படிப்பேன். இப்ப விகடன்லருந்து என்னை பார்க்க வருவீங்கன்னு நெனைக்கல ” என்று குழந்தை போல குதுகுலித்த பெரியவர் ராஜேந்திரனிடம்,
“நீங்க பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்ததை மக்கள் எல்லோரும் பேசுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க?” என்றோம்.
“இப்பன்னு இல்லை. பல வருசமா பல விஷயங்களுக்கும் என்னால முடிஞ்ச உதவியை செஞ்சுக்கிட்டிருக்கேன். இதையெல்லாம் தமுக்கடிச்சா சொல்லணும்?” என்று கூச்சப்படுகிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230817_WA0016.jpg)
“பள்ளிக்கூடங்களுக்கு உதவ வேண்டும்கிற எண்ணம் எப்படி வந்தது?”
“மாநகராசிப் பள்ளிகளில் ஏழைப்புள்ளைங்கதான் அதிகம் படிக்கும். கட்டட வசதி குறைவா இருக்கும். இதைப்பத்தி தெரிஞ்சு ஆரம்பத்துல சின்னச் சின்னதா செஞ்ச உதவிகளை உருப்படியா செய்யணும்னு நினைச்சேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருவிக பள்ளியில் பத்து வகுப்பறை, சைக்கிள் ஸ்டாண்டு கட்ட ரூ.1 கோடியே 10 லட்சம் கொடுத்தேன். இப்ப கைலாசபுரம் பள்ளிக்கு நாலு வகுப்பறை, கழிப்பறை கட்ட 71 லட்ச ரூபாய் கொடுத்தேன். நாம கொடுக்கிற அளவுக்கு அரசாங்கமும் நிதி ஒதுக்கும் என்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளுக்கு உதவ திட்டமிட்டு வச்சிருக்கேன். கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வழங்கினேன். இதையெல்லாம் வெளியே சொல்லணும்னு நெனைக்கல.”
“உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?”
“சொந்த ஊரு விருதுநகர். அப்பா பாலையா, அம்மா பேச்சியம்மாள். அஞ்சாம் வகுப்பு வரை படிச்சேன். அப்புறம் ஒரு மில்லில் மாதச்சம்பளம் 25 ரூபாய்க்கு வேலை பார்த்தேன். அப்பா இறந்தவுடன் வியாபாரம் செய்யலாம்னு 320 ரூபாவோட மதுரைக்கு வந்தேன். இங்கே செல்லூர்ல மளிகைக்கடை வச்சு குறைஞ்ச விலைக்கு பொருள்களை வித்து மக்கள் மத்தியில் அடையாளம் சொல்லும் அளவுக்கு பேமசாயிட்டேன். எனக்கு அப்பவே வியாபார நுணுக்கம் தெரியும். எங்கே குறைஞ்ச விலைக்கு பொருள் கிடைக்குதோ அங்கே சைக்கிளில் போய் வாங்கி வந்து நியாயமான விலைக்கு விற்பேன். தொழிலாளர்கள் நிறைந்த செல்லூர் பகுதியில வறுமையானவங்களும் நிறைய இருந்தாங்க. அதனால சிலர் வந்து தகராறு செய்து பொருள் கேப்பாங்க. தெரியாமல் எடுப்பாங்க. அதுக்காகவே தினமும் பத்துப்படி அரிசியில கஞ்சி காய்ச்சி மக்களுக்குக் கொடுப்பேன். அதனால எல்லோரும் சினேகமாயிட்டாங்க.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230817_WA0020.jpg)
இப்படியே மளிகை வியாபாரம் செஞ்சுகிட்டிருந்த நான் அப்பளம், வத்தல் தயாரிக்க ஆரம்பிச்சேன். அது நல்லா போச்சு. என் மனைவி, பிள்ளைங்க எல்லோரும் சேர்ந்து உழைச்சோம். அதோடு வர்ற வருமானத்தில சேமிக்கிறது, சீட்டு போடுறதுன்னு கவனம் செலுத்தி பணத்தைப் பெருக்கினோம். அப்பவே சில சொத்துக்களை வாங்கிப் போட்டு, இந்த அப்பளம், வத்தல் கம்பெனியை ஆரம்பிச்சோம். இன்னிக்கு உள்ளூர் மட்டுமல்ல, வெளிநாட்டுக்கும் எங்க தயாரிப்பு போகுது. 40 பேருக்கு வேலை கொடுத்திருக்கேன். எல்லோருக்கும் நல்ல சம்பளம் சலுகை கொடுத்திருக்கேன். மூனு பொம்பளப் புள்ளைகளையும் கட்டிக் கொடுத்து அவங்களுக்கு சேர வேண்டியதை பிரிச்சுக் கொடுத்துட்டேன்.
நான் ஆரோக்கியமா இருக்குறதால வியாபாரத்தைத் தொடர்ந்து பார்த்துக்கிட்டிருக்கேன். இதுல வர்ற வருமானத்தில எனக்குப் பிடிச்ச உதவிகளை ரொம்ப காலமா செஞ்சுகிட்டிருக்கேன். இறைக்கிற கேணி தான் ஊறும் என்பதுல நம்பிக்கை உள்ளவன் நான். அதே நேரம் இப்படியெல்லாம் கொடுப்பதால என்னை ஏமாத்தி நன்கொடை வாங்கலாம்னு யாரும் வர முடியாது. எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றேன். பலரும் பாராட்டுறாங்க. முதலமைச்சரும் பாராட்டுனாரு. படிக்காத என்ன படிச்சவங்க மத்தியில பேசச் சொல்றாங்க, கூச்சமா இருக்கு. சின்ன வயசில் 320 ரூபாயோட பிழைப்பதற்கு வந்த எனக்கு இந்த நகரம்தான் அனைத்தையும் கொடுத்தது. அதனால மதுரைக்கு திருப்பிச் செய்றேன், சம்பாத்தியம் எல்லாமே மதுரை மக்களுக்குத்தான்” என்றார்.
ஆச்சரியமான மனிதர்தான்..!