சென்னை டூ பெங்களூரு… 130 கி.மீ ஸ்பீடு, 4 மணி நேரம் தான்… ரயில் பயணம் இனி வேற லெவல்!

சென்னை டூ பெங்களூரு என்பது நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாக திகழ்கிறது. தென்னிந்தியாவின் இரண்டு முக்கியமான நகரங்களுக்கு இடையிலான பயணம் என்பதால் சாலை, ரயில், விமானம் எனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையால் பயணம் மேலும் சொகுசாகவும், விரைவாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் சென்னைக்கும், பெங்களூருவிற்கும் இடையில் ரயில் பயணத்தை விரைவாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற பாஜகவினர்!

ரயில் பாதை அப்கிரேட்

சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில் பாதைகள் விரைவான பயணத்திற்காக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையிலான 144 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் ரயிலின் வேகத்தை மணிக்கு 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகப்படுத்தியுள்ளனர். முன்னதாக சென்னை முதல் அரக்கோணம் இடையில் வேகத்தை அதிகரித்தனர்.

அரக்கோணம் டூ ஜோலார்பேட்டை

இதன் தொடர்ச்சியாக அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை இடையில் ரயில் பாதைகள், சிக்னல்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. இதன் விளைவாக ரயிலின் வேகமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பயண நேரத்தை சுமார் 20 நிமிடங்கள் வரை குறைப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் சென்னை டூ பெங்களூரு ரயில் பயணமானது 4 மணி 25 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரமாக மாறியுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளனர். இதேபோல் சதாப்தி, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி 30 நிமிடங்களாக குறைத்துள்ளது. மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் மேம்பாட்டு பணிகள் பெருமளவு முடிந்துவிட்டன. எனவே அடுத்த வாரத்தில் இருந்து நேரம் குறையும் வகையில் ரயில் பயணம் இருக்கும் எனத் தெரிகிறது.

அதிகபட்ச வேகம் 130 கி.மீ

இதையொட்டி 124 ரயில்களின் செயல்பட்டு பிரிவு மற்றும் லோகோ பைலட்டிற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை LHB பெட்டிகள் கொண்ட ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். அதுவே ICF டிசைன் பெட்டிகள் கொண்ட ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் வரை இயக்கலாம். இது அடுத்த வாரத்தில் இருந்து பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு மட்டுமல்ல

இந்த அறிவிப்பால் பெங்களூரு மட்டுமின்றி கோவை, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் சென்னை டூ பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு தெற்கு ரயில்வே டஃப்பான போட்டியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.