தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் கலைசெல்வன். லோடு ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சதீஷ். கடந்த 15-ம் தேதியன்று சதீஷூக்கு பிறந்தநாள். அவரது மற்ற நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர், அப்பு ஆகியோர் சதீஷிடம் பிறந்தநாள் பார்ட்டி கேட்டுள்ளனர். 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. எனவே பார்டியை அடுத்தநாள் வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார் சதீஷ். ஆனால், அதே நாள் இரவில் சந்திரசேகர் மற்றும் அப்பு இருவரும் தெருவில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230818_WA0009.jpg)
அப்போது கலைசெல்வனின் வீட்டின் அருகில் அவரும் சதீஷூம் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இதனை கண்ட சந்திரசேகர் ”டாஸ்மாக் கடை லீவுன்னு சொன்ன. உனக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைச்சுது? எங்களை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் மட்டும் குடிக்கிறீங்களா?” என சதீஷிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரசேகர் மற்றும் அப்பு இருவரும் பீர் பாட்டிலால் கலைசெல்வன் மற்றும் சதீஷை தாக்கியுள்ளனர்.
மேலும் பீர்பாட்டிலை கீழே உடைத்து போட்டு அதில் கலைசெல்வனின் தலையை பிடித்து அழுத்தியுள்ளனர். இதில் முகம் மற்றும் கழுத்துபகுதியில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான சந்திரசேகர் மற்றும் அப்புவை தேடி வந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/thalamuthunagar_ps.jpg)
இதற்கிடையே 2 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்த கலைசெல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த தாளமுத்துநகர் போலீஸார், நண்பரை கொன்ற டிரைவர் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்புவை தேடி வருகின்றனர். மது வாங்கித்தரவில்லை என்பதற்காக நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.