பந்து வீச்சாளர்களால் தோனியை கணிக்க முடியாது ஏன் தெரியுமா? பாக். முன்னாள் வீரர் முகமது அமீர்

இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகள் (டி20 மற்றும் ஒருநாள்) மற்றும் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக் கொடுத்தவர் கேப்டன் தோனி. இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டில் இதுவரை கண்டிராத சிறந்த விளையாட்டு நுணுக்கங்களை கொண்டவர்களில் ஒருவர். தோனி 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது புகழ் கிரிக்கெட்டில் என்றென்றும் நிலைத்திருக்கும். உலக கிரிகெட்டர்கள் பலரும் இதற்காகவே தோனியை வெகுவாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் தோனிக்கு எதிராக பலமுறை விளையாடியுள்ள அமீர், எம்எஸ்-ஐ பற்றி புகழந்து பேசிய காணொளி வெளியாகியுள்ளது. அதில் தோனியின் தீவிர ஆளுமை காரணமாக பந்துவீச்சாளர்கள் அவரைப் படிக்க கடினமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அமீர் பேசும்போது, ” தோனி ஆளுமையை நீங்கள் பார்த்தால், அவரைப் படிப்பது மிகவும் சாத்தியமற்றது.  ஒரு பந்துவீச்சாளராக, நீங்கள் சில சமயங்களில் ஒரு பேட்டரின் முகத்தைப் படிக்க முயற்சிப்பீர்கள்…அவர் அழுத்தத்தில் இருக்கிறாரா அல்லது பதற்றத்தில் இருக்கிறாரா என அறிந்து கொள்வீர்கள். ஆனால் தோனி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருப்பார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை அவர் சாதித்ததெல்லாம் அவரது அமைதி மற்றும் கூலான இயல்பு காரணமாகும் என்று நான் நினைக்கிறேன். அவர் உலகம் கண்டிராத சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் சிறந்தவர்,” என்று தெரிவித்திருக்கிறார். முகமது அமீர் பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி பெற்றபோது, அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர்.

 (@YouTuberNavee) August 12, 2023

தோனியைப் பொறுத்தவரை அவர் இன்னும் கிரிக்கெட் களத்தை விட்டு முழுமையாக விலகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அடுத்த ஆண்டுடன் ஐபிஎல் கிரிக்கெட் களத்துக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, அண்மையில் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக தன்னுடைய பயிற்சியை தொடங்குவார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை அதிக முறை சாம்பியன் வென்ற அணிகளை தலைமை தாங்கியவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் தோனி மற்றொருவர் ரோகித் சர்மா. இருவரின் தலைமையிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.