பாட்னா: பிஹார் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ராணிகஞ்ச் பஜார் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பிஹார் மாநிலம் அராரிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமல் குமார் யாதவ் (35). இவர் உள்ளூர் பத்திரிகையான டைனிக் ஜாகரனில் வேலை செய்துவந்தார். இன்று அதிகாலை 5:30 மணி அளவில் அவர் வீட்டில் இருந்தபோது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் கதவினைத் தட்டியிருக்கிறார். விமல் குமார் கதவினை திறந்ததும் அவரை நெஞ்சில் சுட்டுக்கொலை செய்தததாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் 5:35 மணிக்கு கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்றார். அராரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து விமல் குமாரின் உடலினைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தடயவியல் ஆய்வுக் குழுவும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டதாக போலீஸார் தெரித்தனர்.
சம்பவம் குறித்து அராரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் கூறுகையில், “ராணிகஞ்ச் பஜார் பகுதியில் விமல்குமார் என்ற பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். உடற்கூராய்வு நடந்து வருகிறது. கொலை நடந்த இடத்துக்கு மேப்ப நாய் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சார்பஞ்சாக இருந்த விமல் குமாரின் தம்பி இதே பாணியில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் விமல் குமார் முக்கிய சாட்சியாக இருந்தார். அதற்காகவும் விமல் குமாரின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் வழக்கு விசாரணையின் போது விமல் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்து வந்தார்.
பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்கு மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இது ஒரு துயரச் சம்பவம். கொலை குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் குற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். எப்படி இப்படி ஒரு பத்திரிகையாளரை கொலை செய்யமுடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பத்திரிகையாளர் கொலைக்காக அரசை குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் “பிஹாரில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக” தெரிவித்துள்ளன. பிஹார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, “மாநிலத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். போலீஸாரும் கொலை செய்யப்படுகின்றனர்.
அராரியாவில் நடந்தது துக்ககராமான சம்பவம். ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் காமாண்டியா (மூர்க்கமான) மகாஹத்பந்தன் கூட்டணி அரசின் ஆட்சி அமைந்ததில் இருந்து இது போன்ற சம்பவங்கள் சகஜமாகி விட்டன” என்று பிஹார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக நிதிஷ் குமாருடன் இணைந்து பிஹாரின் ஆட்சியை பாஜக பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.