மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக.20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மதுரை விமான நிலையத்துக்கு தினமும் அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. மதுரை விமான நிலையம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதனால் மாநாடு நடைபெறும் நாளில் விமானம் தரையிறங்குவதில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. விமான நிலைய பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாநாட்டுக்கு வருவோர் பட்டாசுகள் வெடிக்க வாய்ப்புள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்.

விமான நிலையத்தை சுற்றிலும் 20 கி.மீ தொலைவுக்கு உரிய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. இதை மீறி விளம்பர பலகைககள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு கூட்டத்தால் விமான நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இவற்றை கருத்தில் கொள்ளாமல் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. எனவே, மதுரையில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், தினேஷ்பாபு வாதிடுகையில், “அதிமுக மாநாட்டில் எவ்வித வெடிபொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி வழங்கி இருக்கிறோம். மேலும் காவல் துறை, விமான நிலைய ஆணையக் குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளோம். மாநாடு குறித்து 4 மாதத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் மாநாட்டை நிறுத்தும் நோக்கத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்றனர்.

இதையடுத்து மாநாடுக்கு தடை கோரி கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடினால் எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.