27 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குத் தவறாமல், சரியான நேரத்திலும் வேலைக்குச் சென்று வந்த பர்கர் கிங்கில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், 4,22,185 டாலருக்கும் (3.50 கோடி) அதிகமான நன்கொடைகளைப் பெற்றுள்ளார்.
லாஸ் வேகாஸில் உள்ள மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் கேஷியராகவும், சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்தவர் கெவின் ஃபோர்டு. கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் பர்கர் கிங்கில் 27 ஆண்டுகள் பணியாற்றியதைக் கொண்டாடும் விதமாக, இவர் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், தன்னுடைய சக ஊழியர்கள் கொடுத்த பரிசு பொருள்களை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைத்திருந்தார்.
மூவி டிக்கெட், சாக்லெட், பேனா, கீ செயின், ஸ்டார்பக்ஸ் கப் போன்றவற்றைப் பரிசு பொருள்களாக அவருக்குக் கொடுத்திருந்தனர். நெட்டிசன்கள் இந்த பரிசு பொருட்கள் மலிவானதாக உள்ளது. இதைத் தாண்டி `நீங்கள் வெகுமதிக்குத் தகுதியானவர்’ எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய தந்தையைக் குறித்து நிதி திரட்டும் பக்கமான `GoFundMe’ பக்கத்தில் செரினா எழுதினார். அதில், “27 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது மூத்த சகோதரியையும் பாதுகாக்க சிங்கிள் தந்தையாக இந்த வேலையை செய்ய தொடங்கினார் அப்பா.
பின்னர் எங்களது குடும்பம் வளர்ந்து அவர் மறுமணம் செய்து கொண்டார். பணியிடத்தில் வழங்கப்பட்ட உடல்நல காப்பீட்டின் காரணமாகத் தொடர்ந்து அங்கு பணியாற்றினார். இது அவரது நான்கு மகள்களையும், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து முடிக்க உதவியது.
அவர் இளமையாக இருந்தாலும், ஓய்வு பெரும் வயதில் இருக்கிறார், இருந்தபோதும் தொடர்ந்து அப்பா அங்கு வேலை செய்கிறார். எந்த வகையிலும் நாங்கள் அவரிடம் பணம் கேட்கவில்லை, அவரும் பணத்தை எதிர்பார்க்க வில்லை. ஆனால் யாரேனும் அவரை ஆசிர்வதிக்க விரும்பினால், அவர் தனது பேரக்குழந்தைகளைப் பார்க்க விரும்புவார்’’ என்று பதிவிட்டு இருந்தார்.
தற்போது ஃபோர்ட்டின் பக்கத்தில், 422,185 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தற்போது `என்னுடைய தந்தையால் அவரது பேரக்குழந்தைகளைச் சென்று பார்க்க முடியும்’ என்று அவருடைய மகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
அப்பாக்கள் பாசத்தை சொல்லி புரிய வைப்பவர்கள் இல்லை, செய்து காட்டி புரிய வைப்பவர்கள்!