2023 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்களுக்கும் குறைவாக உள்ளது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் சமயத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கணிப்புகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலியும் தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, என்னுடைய கணிப்பின்படி 5 அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியிருக்கும் அவர், இந்திய அணியில் நான்காவது இடத்துக்கு ஆள் இல்லை என்ற ரோகித் சர்மாவின் கருத்தை முற்றிலுமாக புறகணித்துள்ளார். இந்திய அணியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய தரமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இப்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் திலக் வர்மாவை அந்த இடத்துக்கு தேர்ந்தெடுக்கலாம். அவர் பொருத்தமாக இருப்பார் என நான் நம்புகிறேன். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். இளம் வீரராகவும் இருக்கிறார். திலக் வர்மா மீது நம்பிக்கை வைத்து அந்த இடத்தில் விளையாட அனுமதித்தால் இந்திய அணிக்கு சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், ஜெய்ஸ்வால், திலக் வர்மா இஷான் கிஷன் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் பயமின்றி விளையாடவும் அனுமதிக்க வேண்டும். ராகுல் டிராவிட், ரோஹித் மற்றும் தேர்வாளர்களுக்கு நிறைய ஆப்சன்கள் இருக்கின்றன. அவர்கள் சிறந்த XI ஐ அடையாளம் கண்டு தேர்வு செய்ய வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் 2023 உலகக் கோப்பை தொடங்குகிறது. அதே மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும். இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 8-ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.