"குட்பை சீம்ஸ்".. உலகையே மகிழ்வித்த சீம்ஸ் நாய் விடைபெற்றது.. சோகத்தில் மூழ்கிய சோஷியல் மீடியா!

ஹாங்காங்:
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலமாக அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வந்த சீம்ஸ் நாய், உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பவர்கள் அனைவருக்குமே சீம்ஸ் நாயை தெரிந்திருக்கும். சீம்ஸின் புகைப்படத்தை வைத்து வலம் வந்த மீம்ஸ்கள் அனைவரின் வயிறையும் புண்ணாக்கி இருக்கும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அனைவருக்கும் செல்லப் பிராணியாக வலம் வந்தது. மற்ற நாய்களை போல அல்லாமல் சீம்ஸின் முகம் சற்று உருண்டையாகவும், வாய் சிரிப்பது போலவும் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான முக பாவனைகளை காட்டும் சீம்ஸ் நாயின் புகைப்படங்களும், கிராபிக்ஸ் இமேஜ்களும் அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தன. குறிப்பாக, கொரோனா ஊரடங்கின் போது எதிர்காலம் எப்படி இருக்குமோ என சோகத்தில் இருந்தவர்களுக்கு சீம்ஸ் நாயின் மீம்ஸ்கள் ஸ்டெரஸ்பஸ்டராக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்த சீம்ஸ் நாய்க்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சையின் போதே மீம்ஸ் நாய் இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர்.

பலரும் சீம்ஸின் நினைவாக அதன் பழைய மீம்ஸ்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல, சீம்ஸ் இறந்து சொர்க்கத்திற்கு செல்வது போலவும், மக்களை சொர்க்கத்தில் இருந்தே சந்தோஷப்படுத்துவது போலவுமான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீம்ஸ் நாயின் உண்மையான பெயர் ஷீபா இனு என்பதுதான். ஒரு வயது குட்டியாக இருந்த போது ஷீபாவை ஹாங்காங்கை சேர்ந்த தம்பதியர் எடுத்து வளர்த்து வந்தனர். 2010-ம் ஆண்டு பேஸ்புக் பிரபலமான சமயத்தில், எதேச்சையாக பதிவிடப்பட்ட ஷீபாவின் புகைப்படம் அனைவருக்கும் பிடித்து போக அதை வைத்து மீம்ஸ்கள் வெளிவரத் தொடங்கின. சீம்ஸின் இறப்பு குறித்து அதன் உரிமையாளர்கள் வெளியிட்ட பதிவில், “இந்த பூமியில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் மிஷனை சீம்ஸ் முடித்துவிட்டது. இப்போது சொர்க்கத்தில் தனது நண்பர்களுடன் அதற்கு பிடித்த உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்” என பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.