மதுரை: மதுரை மாவட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினருக்கு உதவி புரிந்தோருக்கு இன்று மதுரை மாவட்ட எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், திருடிய சொத்துக்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனங்களை கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடையவும் என பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட எஸ்பி சிவபிரசாத், காவல்துறையினருக்கு உதவி புரிந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 பேரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்களது பகுதிகளில் சமூக அக்கறையோடு சிசிடிவி கேமராக்களை நிறுவி காவல்துறையினருக்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.