திருநெல்வேலி: “தாமிரபரணியை சுத்தம் செய்ய தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்க வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பிலான நடைபயணத்தை அவர் தொடங்கினார். பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையிலுள்ள பெல் மைதானம் அருகே தனது நடைபயணத்தை தொடங்கிய அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து வாட்டர் டேங்க், பாளையங்கோட்டை மார்க்கெட் சாலை வழியாக சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசுவாமி கோயில் திடலுக்கு வந்த அவர் பேசியதாவது:
“மகாபாரதத்தில் பாடப்படும் தாமிரபரணி நதி, தற்போது நாட்டிலேயே மிகவும் மோசமான நதியாக மாறிவிட்டது. 6 மடங்கு அதிகமாக அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கங்கை நதியை பல கோடி செலவிட்டு சுத்தம் செய்வதுபோல் தாமிரபரணியை சுத்தம் செய்ய தமிழக அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்க வேண்டும்.
பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை 8 மாதத்திலேயே கீழே விழுந்தது. மத்திய அரசு நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் கமிஷன் வாங்குகிறார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள திமுக கவுன்சிலர்களில் 40 பேர் மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எந்த திட்டமானாலும் மேயர் 30 சதவிகிதம் கமிஷன் கேட்பதாகவும், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதாகவும் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் ஊழல் மலிந்துள்ளதை இது காட்டுகிறது.
ராமநாதபுரத்தில் தமிழக முதல்வர் பேசும்போது, பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் வடை சுட்டதாக தெரிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 505 ஊசிப்போன வடைகள் இருப்பதை ஞாபகப்படுத்துகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியிருக்கிறது. 24 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 4 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டிருந்தது.
ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.1310-ல் இருந்து 2183 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாய நலன் சார்ந்த திட்டங்களுக்கு மட்டும் ரூ.1872 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 95 சதவிகிதம் மானியத்தில் யூரியா வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பொய்களை சொல்லி வருகிறார். மகளிர் உரிமை திட்டம் என்பதே ஏமாற்றும் பித்தலாட்டம்.
மதுபாட்டில்கள் உற்பத்தியாவதில் இருந்து அவற்றை விற்பனை செய்வது வரையில் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி சொல்கிறார். ரேஷன் அரிசி மூடை மூடையாக கடத்தப்படுகிறது. இதை தடுக்க கிட்டங்களிலும், கடைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து லாக்கப் மரணங்கள், சாதி பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பள்ளி மாணவர்கள் மத்தியிலும் சாதி மோதல்கள் நிகழ்கின்றன. நாங்குநேரியை தொடர்ந்து தற்போது கோவில்பட்டியிலும் அத்தகைய மோதல் நடந்துள்ளது. இதற்குமுன் இவ்வாறு நடந்ததில்லை.
இப்போது நீட் நாடகத்தை திமுக ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் 33 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 22 கல்லூரிகள் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இந்த கல்லூரிகள் அமைவதற்கு திமுக பணம் பெற்றுள்ளது. நீட் வந்தபின் இந்த தனியார் கல்லூரிகளின் வருமானத்தில் மண் விழுந்திருக்கிறது. இதனால் பிள்ளைகளை திமுக தூண்டிவிடுகிறது. கச்சத்தீவை திமுக எப்படி திட்டம்போட்டு காவு கொடுத்தது என்பதை காணொலி காட்சி மூலம் விளக்கவுள்ளோம்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் கொண்டுவந்துள்ளார். வரும் செப்டம்பர் 17-ம் தேதி இத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத் திட்டத்தால் 18 பாரம்பரிய தொழில்புரிவோர் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அத்தொகையை செலுத்தியபின் 2-வது தவணையாக ரூ.2 லட்சம் கடன் 5 சதவிகிதம் வட்டிக்கு வழங்கப்படும். இத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்: பாளையங்கோட்டையில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக உறுப்பினருமான புவனேஸ்வரி, பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட வழிநெடுக பாஜக சார்பில் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். அப்போது ராட்சத செம்மறி ஆடு ஒன்றை பாஜக தொண்டர்கள் சிலர் கொண்டுவந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பசுமாட்டு தீவனங்களுக்கு மானியம் வழங்குவதுபோல் ஆடுகளுக்கான தீவனங்களுக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசும்போது, திருநெல்வேலி வீரம் செறிந்த மண் என்பதையும், இப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் சுட்டிக்காட்டினார்.