புதுடில்லி,:ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 75. பீஹார் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்ததாக, அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான நான்கு வழக்குகளில் அவருக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவை காரணம் காட்டி, அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே, மத்தியில் காங்., தலைமையிலான ஆட்சிக் காலத்தில் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக, அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யும்படி, சி.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது வரும் 25ம் தேதி விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement