தொங்கி வேலை பார்த்த கட்டடமும்… படுத்துறங்கிய தெருவும் மறக்க முடியாது!; சூரி நெகிழ்ச்சி

1997ம் ஆண்டு, 'காதலுக்கு மரியாதை' படத்தில் துவங்கியது இவரது பயணம். மறுமலர்ச்சி, சங்கமம், வின்னர், நினைவிருக்கும் வரை, ஜேம்ஸ் பாண்டு, காதல், ஜி, என நாம் எதிர்பார்க்காத பல படங்களிலும், முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழுவின், 'பரோட்டா சூரி' கதாபாத்திரம்தான் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. இப்போது விடுதலை படம், ஹீரோ அந்தஸ்தை தந்துள்ளது. நடிகராக வலம் வரும் அதே சமயம், சூரி உணவகங்களை நடத்தி வரும் தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்தின் வெற்றி; யாருடைய பாராட்டை மறக்க முடியவில்லை?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை, இரவு 10:00 மணிக்கு அழைத்து பாராட்டியது மறக்கமுடியாத தருணம். 'அண்ணாத்த படத்தில் நடித்த சூரியா இது; நம்ப முடியல' என கூறிய அந்த வார்த்தை, பிரம்மிப்பாக இருந்தது. 'உண்மையா இருங்க; தொழில் உங்களை கைவிடாது' என அறிவுரையும் வழங்கினார்.

தொழில்முனைவோராகவும், நடிகராகவும் உங்கள் நேரத்தை எப்படி நிர்வாகம் செய்கின்றீர்கள் ?
சினிமா எனது தொழில்; சரியான நேரத்தில் தளத்திற்கு சென்றுவிடுவேன். தினமும் காலை, மதியம் என குடும்பத்தாருடன் பேசுவேன். சாம்பார் எப்படி இருந்தது முதல் நிறைய பேசி, நிறை, குறைகளை உடனுக்குடன் சரிசெய்து விடுகிறேன்.

அடுத்த படத்தில் காமெடியனா அல்லது ஹீரோவா? உங்கள் ரோல் மாடல் யார்?
என்னை நடிகனாக மட்டும் பார்த்தால் போதும். ரோல் மாடல் என்று எனக்கு திரைத்துறையில் யாரும் இல்லை. நான் அன்றாடம் பார்க்கும் ஆட்டோகாரர், தக்காளி விற்பவர், சக ஊழியர், என பார்ப்பவர்கள் அனைவரிடமும் ஏதோ ஒன்றை பாடமாக எடுத்துக்கொள்வேன். எப்போதும் நான், நானாகவே இருக்கின்றேன்.

உச்சத்தை அடைந்துள்ள நீங்கள்… பழசை மறக்காமல் இருக்க என்ன செய்கின்றீர்கள் ?
பெரிய அளவில் ஏதும் செய்துவிடவில்லை. சில நேரங்களில் நம்மை மீறி சில குணங்கள், பகட்டுகள் எட்டி பார்க்கும். அப்போது, நான் தொங்கி கொண்டு வேலை பார்த்த கட்டடமும், படுத்து உறங்கிய ரோட்டோர இடங்களும் என் தலையில் தட்டி, என்னிடம் பேசுவது போல் உணர்வேன். அப்படியே பகட்டு வந்த இடம், தெரியாமல் போய்விடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.