இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர்.
பல சாதனைகளைப் படைத்த இவர் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது. இதனால் அவருக்கு சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைக்காலத் தடையை விதித்திருந்தது. இதையடுத்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் மேல் முறையீடு செய்தார். ஆனால் தான் ஊக்கமருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டதால் தற்போது 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தும் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/grvf96pg4db7mtfyie22.jpg)
இதுகுறித்து பேசிய டூட்டி சந்த், “ நான் சவால் செய்திருந்த வழக்கில் தோல்வியடைந்து 4 ஆண்டுகள் தடையைப் பெற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எந்தவொரு தடகள வீரருக்கும் 4 ஆண்டுகாலத் தடையை இந்தியாவில் விதிக்கவில்லை. மீண்டும் மேல்முறையீடு செய்வேன். கடினமாக உழைத்து நாட்டிற்காக விளையாடி இருக்கிறேன். வரவிருக்கும் காலங்களில் நான் கடினமாக உழைத்து இந்தியாவைப் பெருமைப்படுத்தும் அளவுக்கு எனக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க விளையாட்டு ஆணையம் மற்றும் அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறுவதற்கான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றபோது, எனக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது. இதனால் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டேன். அப்போது மருத்துவர் சுதிப் சத்பதி உனக்கு லெவல் 1 கேன்சர் அறிகுறி இருக்கிறது என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு மருந்துகள் சாப்பிட்டேன். வலி குறைந்து குணமடைந்து விட்டேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/f86804043819f5afae21d45ffab4cf29f3baad82.jpg)
வலி நிவாரணத்திற்காக நான் அந்த மருந்தை 15-20 நாட்கள் சாப்பிட்டேன். அது ஊக்க மருந்து என்பது எனக்குத் தெரியாது. இந்த மாதிரியை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் கொடுத்தபோது ஊக்கமருந்து சோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதுதான் தடைக்கான காரணம். இதே மருத்துவ அறிக்கையை வேறொரு நிபுணருக்கும் அனுப்பினேன். அவர், ’இதுபோல் இன்னும் சிலருக்கும் நடந்துள்ளது’ எனக் கூறினார்” என டூட்டி சந்த் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.