அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட 8 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு: இபிஎஸ் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி; திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையன்; கோவை மாவட்டத்தைச் சேர்ந்த,கதிரேசன்; கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த. பழனிச்சாமி; கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து; தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன்; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரை; புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாம்பசிவம்; ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும்; வாகனங்களில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

நிர்வாகிகளும், தொண்டர்களும், சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நான் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று, கட்சியினர் உயிரிழப்பதும், காயங்கள் அடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவர்களது குடும்பத்துக்கு கட்சியின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கட்சியின் சார்பில் தலா 1,50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.