துல்கர் சல்மான் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் சினிமா விகடனிற்குப் பேட்டி அளித்திருந்த துல்கரிடம் ‘உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர் யார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யோகி பாபு என்று பதிலளித்திருந்தார். மேலும் யோகி பாபு ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அவரை புகழ்ந்து பேசியிருந்தார். இந்த வீடியோ சினிமா விகடன் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவை தற்போது யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து துல்கருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பதிவில், “உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி துல்கர் சார். உங்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவும், காமெடி செய்யவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். யோகி பாபுவின் இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ள துல்கர் சல்மான், “காத்திருக்கிறேன் சார். காமெடி மட்டுமல்ல. உங்களால் எல்லாம் செய்ய முடியும். எந்த வகையான படத்திலும் உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்குப் பிடித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர்” என்று புகழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.
யோகி பாபு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவைத் தொடரான ‘லொள்ளு சபாவில்’ சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர். ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காமெடி நடிகராகப் பல படங்களில் நடித்து வந்த இவர் ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’, ‘கூர்கா’ போன்ற படங்களில் நாயகனாகவும் சீரியஸான வேடங்களிலும் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஹே சினாமிகா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.