சீனாவுக்கான வெற்றிகரமான பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பினார்

யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்ற 7வது சீன-தெற்காசிய கண்காட்சியில் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு (19) இரவு நாடு திரும்பினார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்றிரவு அவர் குன்மிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, யுன்னான் CPC செயலாளர் ஜாவோ ஜினுரிங் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு பிரதமரை வழியனுப்பியதுடன், அங்கு பெருமளவான மக்கள் சீனா மற்றும் இலங்கைக் கொடிகளை அசைத்த வண்ணம் நின்றிருந்தனர்.

இந்தப் பயணத்தின் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்திய செயற்குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான வெளியுறவு அமைச்சர் வாங் யீ, யுனான் மாகாண அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள், மாகாணத்தின் சிபிசி செயலாளர் வாங் நிங் மற்றும் யுனான் மாகாணத்தின் ஆளுநர் வாங் யூபோ ஆகியோருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தக் கண்காட்சியுடன் இணைந்ததாக வியட்நாமின் துணை ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினார்.

பிரதமரைச் சந்தித்த பின்னர், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இலங்கையின் சுயாதீன அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், அதன் கைத்தொழில்மயமாக்கல் செயன்முறையை துரிதப்படுத்தவும் மற்றும் விவசாய நவீனமயமாக்கலுக்கும் சீனா உதவும்.” என்று அமைச்சரை மேற்கோள்காட்டி சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறைமை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது, மேலும் இலங்கையுடன் பல்வேறு துறைகளில் அனுபவப் பரிமாற்றங்களை வலுப்படுத்தவும் தயாராக உள்ளது.

இலங்கை அதன் தற்காலிகமான சிரமங்களை கடந்து, அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப அபிவிருத்திப் பாதையைக் கண்டறிந்து, புத்துயிர்ப்பு மற்றும் செழிப்பை அடையும் என அமைச்சர் வாங் யீ நம்பிக்கை தெரிவித்தார்.

இக் கண்காட்சியில் தனது உரையை நிறைவு செய்த பிரதமர், “முடிவாக, பௌத்தத்தில் கல்யாண மித்ரர்களின் முக்கியத்துவம் போதிக்கப்படுகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். கல்யாண மித்ர என்பது நல்ல நேரங்களிலும், கஷ்டமான நேரங்களிலும் உதவும் சிறந்த நட்பு பற்றியதாகும். சீனாவுடன் வளர்த்தெடுக்கப்பட்ட நட்பை உண்மையான சிறந்த கலயாண மித்ரர்களில் ஒன்றாக இலங்கை பார்க்கிறது, நல்ல மற்றும் கஷ்டமான சந்தர்ப்பங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவாக நின்றது” எனக் குறிப்பிட்டார்.

யுனான் விவசாய விஞ்ஞான கற்கைகள் நிறுவனம், குன்மிங் சர்வதேச மலர் வர்த்தக மையம் , யுனான் சூரிய மின் நிலையம், குஷேன் கிராம பரிசோதனை நெல் வயல், எர்ஹாய் சூழலியல் பாதை, சியாகுவான் டோச்சா தேயிலை பரிசோதனை மையம் மற்றும் யுனான் மாகாணத்தின் டாலியில் உள்ள Three- Pagoda Chongsheng விகாரை ஆகியவற்றையும் பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.