சென்னை: தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அகிலேஷ்குமார் கந்தசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “குற்ற வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக, முக அடையாள தொழில்நுட்பம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தமிழக முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்று திரும்பிய தன்னையும், தனது சகோதரரையும் தடுத்து நிறுத்திய போலீசார் தங்களின் அனுமதியைக் கேட்காமல் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்களை மாநில டேட்டா மையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது எனது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. எந்த சட்டமும் நிறைவேற்றப்படாமல் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், முக அடையாள தொழில்நுட்பத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் முக அடையாள தொழில் நுட்பத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், சட்ட அங்கீகாரம் இல்லாமல் முக அடையாள தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது” என்று வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர், அக்டோபர் 5ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு , விசாரணையை ஒத்திவைத்தனர்.