பாதயாத்திரையில் 'போலீஸ்' எனக் காட்டிய அண்ணாமலை.. "என்ன தம்பி இது".. அலறிய நெல்லை

நெல்லை:
நெல்லையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. குறிப்பாக, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, உயர்கல்வி தரம், டாஸ்மாக் என பல விஷயங்களை முன்வைத்து தமிழக அரசு மீது சரமாரியாக அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார்.

அந்த வகையில், தற்போது நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை, அங்கு மக்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், களக்காடு நகராட்சிக்கு இன்று வந்த அண்ணாமலை அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். அவர்களின் அன்றாட பிரச்சினை என்ன.. தமிழக அரசின் மீதான அபிப்ராயம், மத்திய அரசின் நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களும் அண்ணாமலையை சந்திக்க ஆர்வமுடன் வந்து அவருடன் பேசினர்.

அப்போது, கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்த சிறுவர்கள் சிலர், அண்ணாமலைக்கு கைக்கொடுத்தனர். அவர்களிடம் கைக்குலுக்கி நலம் விசாரித்து வந்த அண்ணாமலை, ஒரு சிறுவனை கண்டதும் முகம் சுருக்கினார். முடியை புள்ளிங்கோ ஸ்டைலில் வெட்டியிருந்த அந்த சிறுவனிடம், “டேய் தம்பி.. இங்க வா.. என்னடா தலையில.. என்ன கட்டிங் இது” என அதட்டலாக கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “பாக்ஸ் கட்டிங் சார்” எனக் கூறினார். அதை கேட்டதும், “படிக்கிற பசங்க இப்படியா முடி வெட்டிக்கிறது.. டிசிப்பிளினா இருக்கணும்” என அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

என்னதான் அரசியல்வாதியாக மாறினாலும் பழைய போலீஸ் குணம் அண்ணாமலையிடம் இருந்து இன்னும் விலகவில்லை என அங்கிருந்த மக்கள் பேசியதை கேட்க முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.