பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை சுமக்க எப்படி நிர்பந்திக்க முடியும்? – உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, அவருடைய 27 வார கர்ப்பத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தனது கவனத்துக்குக் கொண்டுவந்த பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவை சுட்டிக்காட்டி கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தது. கூடவே, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைச் சுமக்க எப்படி நிர்பந்திக்க முடியும் என்று காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளது.

சிறுமி வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “சிறுமி தனது 27 வார கர்ப்பத்தை கலைக்க இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அவர் பாருச் மருத்துவமனையில் அனுமதியாகலாம். அங்கே அவருக்கு மேற்படி சிகிச்சை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் பிவி நாகரத்னா, உஜ்ஜல் புயான் கூறுகையில், “விருப்பமின்றி உருவான கருவை குழந்தையாக பெற்றெடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் எங்களின் முன்னால் வந்த வழக்கு. ஆனால், இதனை குஜராத் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவே இல்லை. சம்பந்தப்பட்ட சிறுமி மருத்துவக் குழு முன்னர் ஆஜர்படுத்தப்பட குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடைய மருத்துவ அறிக்கை அவர் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறியும் அவரை கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்காதது ஏற்புடையதல்ல.

இந்தியச் சமூகத்தில் திருமணத்துக்குப் பிந்தைய குழந்தை பிறப்பு மகிழ்ச்சியான தருணமாகக் குடும்பத்தினராலும், சமுகத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் திருமணத்தைத் தாண்டிய் குழந்தைப் பிறப்பு ஒரு பெண்ணுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளிலும் ஒரு பெண்ணுக்கு அவர் உடலின் மீது முழு உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்தியுள்ளது” என்றனர்.

நீதிபதி பூயான் கூறுகையில், சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை எப்படி சுமந்து பெற்றெடுக்க நிர்பந்திக்க முடியும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தபின்னர் கரு உயிருடன் இருப்பது தெரிந்ததால் அந்தக் கருவை மருத்துவமனை இன்குபேட்டரில் வைத்து வளர்த்து குழந்தையை சட்டப்படி தத்துக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.