மகளிர் உரிமைத் தொகை திட்டம் – 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அரசு தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.