கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் இருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 போலீஸார் பணி புரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையத்திற்கு எதிரே செல்வம் என்பவர் சிறிய அளவில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் இருந்துதான் இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸார் தினமும் டீயும், வடையும் வரவழைத்து சாப்பிட்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான தொகையை செலுத்தாமல் கடன் வைத்தே அன்றாடம் டீயையும், வடையையும் சாப்பிட்டிருக்கின்றனர்.
இப்படியே 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கடன் தொகை ரூ.7,000/- ஆக அதிகரித்திருக்கிறது. `கடன் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. என்னோடது சிறிய கடை. இந்த வருவாயில்தான் எங்கள் குடும்பமே சாப்பிட வேண்டும். அதனால் பாக்கியை கொடுங்கள்’ என்று போலீஸாரிடம் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார் கடை உரிமையாளர் செல்வம். ஆனால் அதை பொருட்படுத்தாத போலீஸார், தொடர்ந்து டீயையும், வடையையும் சாப்பிட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடன் பாக்கி தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு புகார் சென்றிருக்கிறது.
அதையடுத்து அந்தப் புகார் சம்மந்தப்பட்ட கரியாலூர் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறது. உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள், டீ கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “போலீஸாருக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு இங்கு நான் கடையை நடத்திவிட முடியுமா? அவர்கள் கடன் பாக்கி வைத்திருப்பது உண்மைதான். ஆனால் நான் யாருக்கும் புகாரளிக்கவில்லை” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் பாக்கி விவகாரம் மேலிடத்திற்கும், கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கான பாக்கித் தொகையை உடனே கொடுக்குமாறு கரியாலூர் போலீஸாருக்கு உத்தரவிட்டார் கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளர் மோகன்ராஜ்.
அதையடுத்து கடை உரிமையாளர் செல்வத்தின் மனைவி அன்புக்கரசியிடம், கரியாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆனந்த் ரூ.7,000/- கடன் பாக்கியை கொடுத்தார். அத்துடன் வரும் நாட்களில் கொடுக்கப்படும் டீக்கு உடனுக்குடன் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். தொடர்ந்து அன்புக்கரசியிடம் கடன் பாக்கியைத் தரும் புகைப்படத்தை தங்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்ட போலீஸார், `டீக்கடைக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை செலுத்தப்பட்டுவிட்டது’ குறிப்பிட்டிருந்தனர். அதேசமயம் இந்தப் புகார் எப்படி தனிப் பிரிவுக்கு சென்றது என்றும் ரகசியமாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்களாம் கரியாலூர் போலீஸார்.