டாஸ்மாக் விற்பனை நேரம் குறையுதா? – மதுப்பிரியர்களுக்கு ஷாக் தந்த அமைச்சர்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நேரம் குறைக்கப்பட்டு பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. தற்போது 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

கொரோனா காலத்தில் மட்டும் அது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்று இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், “மது அருந்துவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 21 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினரும் மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மது ஒரு சமுதாயத்தையே சீரழித்து வருகிறது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பதை தடை செய்யும் வகையில், மது வாங்க உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் நலன் கருதி மதுவுக்கு அடிமையானவர்களை தடுக்க, டாஸ்மாக் விற்பனை நேரத்தை கட்டுப்படுத்தலாம். மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்திருந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும். மது விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பரிந்துரைகள் அளித்து தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, “மதுபாட்டில்களின் விலை பட்டியல் அனைத்து இடங்களிலும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. 99 சதவிகித டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் உள்ளது. ஏதேனும் ஒரு சில இடங்களில் இல்லாமல் இருக்கலாம்.

மேலும், டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பது பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி ஆலோசனை செய்த பிறகுதான் சொல்ல முடியும். வாய்மொழியாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. நீதிமன்றம் சொல்லும்போது அதனை அமல்படுத்திதான் ஆக வேண்டும். அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்” என்றும் கூறினார்.

அமைச்சரின் இந்த சூசகப் பேச்சால் மது விற்பனை செய்யப்படும் குறைக்கப்படலாமா என்ற கேள்விகளும் மதுப் பிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.