புதுடெல்லி: நண்பரின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் டெல்லியின் மூத்த அரசு அதிகாரி, அவரது மனைவியும் கைது செய்யப்படுவதற்கு முன்பு தப்பி ஓட முயன்றது தெரியவந்துள்ளது.
டெல்லியின் தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரி பிரேமோதய் ஹாக்கா, சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை வழங்கிய குற்றச்சாட்டில் அவரது மனைவி சீமா ராணியையும் டெல்லி போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு அதிகாரியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வெளியான நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக தப்பிச் செல்வதற்கு பிரேமோதய் ஹாக்கா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து திங்கள்கிழமை காலை 9.35 மணிக்கு மனைவியுடன் காரில் வெளியேறியுள்ளார். இந்தக் காட்சி அவரது வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
பதிவான காட்சிகளில் நீலநிற சட்டை அணிந்திருக்கும் பிரேமோதய் காரை ஓட்டிய படி வீட்டிலிருந்து வெளியேறுவது பதிவாகியிருக்கிறது. இந்தப் பதிவுகளை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர். தகவல்களின் படி, அரசு அதிகாரி வழக்கறிஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், கைதினை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முன்பிணை பெறுவதற்கான முயற்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குள் முந்திக்கொண்ட டெல்லி போலீசார் அதிகாரி, அவரது மனைவி இருவரையும் கைது செய்தனர்.
வழக்கு பின்னணி: டெல்லியின் மூத்த அரசு அதிகாரியான பிரேமோதய் ஹாக்கா, கடந்த 2000-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி குற்றம்சாட்டப்பட்டவரின் இல்லத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் சிறுமியின் பாதுகாவலர் என்ற போர்வையில் இருந்துகொண்டே சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளை பிரேமோதய் ஹாக்கா செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. சிறுமியை அவர் கடந்த 2000 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவர், அவரது மனைவி மீது டெல்லி போலீஸார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவான கிரிமினல் குற்றம், சதி, மிரட்டல், அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவுகளுடன், உடனடி கைதுக்கு வழிவகுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேமோதயின் மனைவி, சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.