உண்ணாவிரதப் போராட்டம்:
தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதுரையைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தைக் காலை 9 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிவரை நீடித்தது. உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
அதோடு, சென்னை மேயர், திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மாற்றுக் கட்சி உறுப்பினர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த போராட்டத்தில் அமைச்சராக வரவில்லை. உயிரிழந்தவர்களின் அண்ணனாக வந்திருக்கிறேன். நீட் தேர்வால் உயிரிழந்த 21 பேரின் மரணம் தற்கொலை கிடையாது. அது கொலை. அதற்குத் துணை நின்றது அ.தி.மு.க. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் பதவி பறிக்கப்படும் என்றுகூட என்னை அச்சப்படுத்தினார்கள். அ.தி.மு.க வழக்கறிஞர் என்மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எந்த இழப்பு வந்தாலும், என் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்றே, இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தேன்.
நீங்கள் ஒரு போஸ்ட் மேன்:
நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுடன் ஆளுநர் ரவி சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு பெற்றோர், “இந்த நீட் தேர்வு தேவையில்லை, பொருளாதார வசதி பெற்றவர்களால் மட்டுமே நீட் தேர்வை வெல்லமுடிகிறது. எனவே இந்த நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப்படும்?” எனக் குரல் எழுப்பினார். அதற்கு, எவ்வளவு திமிரும், கொழுப்பு இருந்தால், ஆர்.என் ரவி i will ever, never எனப் பதிலளித்திருப்பார். நான் கேட்கிறேன். அதைச் சொல்ல Who are you? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியா… நீங்கள் ஒரு போஸ்ட் மேன் அவ்வளவு தான். முதல்வர் சொல்வதை மத்திய அரசிடம் சேர்க்கும் பணிமட்டும் தான் உங்களுடையது. மரியாதை கொடுத்தால்… அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆர்.என். ரவியாக அல்ல, ஆர்.எஸ்.எஸ் ரவியாகத்தான் ஆளுநர் செயல்படுகிறார்.
உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, உங்கள் சித்தாந்தத்தை மக்களிடம் கூறி தேர்தலைச் சந்தியுங்கள். அதில் வெற்றிபெற்றால், நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு நான் உங்களுடன் வருகிறேன். நீங்கள் சொல்வதை நானே செய்கிறேன். இறந்த மாணவனின் வீட்டுக்குச் சென்றபோது, தம்பி பயாசுதீன் என்னை எதிர்த்துக் கேள்வி கேட்டார். அவரையே இப்போது எனது மேடையில் ஏற்றிப் பேச வைத்தேன். இந்த தைரியம் கூட இல்லாத ஆளுநர், அவரை எதிர்த்து கேள்வி கேட்ட அந்தப் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிரட்டல் விடுகிறார்கள். அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுதான் முடிவல்ல… ஆரம்பம்!
போராட்டம் முடிவல்ல; டெல்லியில் சந்திப்போம்:
தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க-வே தேவையற்றவைதான். தமிழக மக்கள் அ.தி.மு.க வையும், பா.ஜ.க-வையும் மன்னிக்கவே மாட்டார்கள். மதுரையில் நடக்கும் விழாவில் அ.தி.மு.க நீட் தேர்வை எதிர்த்து ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றட்டும் பார்க்கலாம்…. நீட் விவகாரத்தில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. நீட் ரத்து குறித்து நாங்களும் வாக்குறுதி அளித்தோம், நீங்களும் வாக்குறுதி அளித்தீர்கள். எனவே, எடப்பாடி அவர்களிடம் கெஞ்சிக்கேட்கிறேன். உங்கள் மாணவர் அணிச் செயலாளரை அனுப்புங்கள், நாம் சேர்ந்து, டெல்லி பிரதமர் வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அது உங்களின் முழு முயற்சியால் நடந்தது என அதன் முழுப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தலைவரை இரும்புப் பெண்மணி எனக் கூறிக்கொள்ளும் நீங்கள், குறைந்தபட்சம் ஒரு பித்தளை அல்லது பிளாஸ்டிக் மனிதராகவாவது இருக்க வேண்டாமா? நீட்டை எதிர்த்து தைரியமாகக் குரல் கொடுங்கள்… எனக் கேட்கிறோம். ஆனால், உண்மையில் அ.தி.மு.க- தலைவர்கள் மோடி, அமித் ஷா செய்து வைத்த களிமண்ணாகத்தான் இருக்கிறார்கள். மாணவர்களே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மாடு பிடிப்பதற்குச் சண்டை போட்டோம்.. மாணவர்களுக்காக, கல்விக்காகச் சண்டை போட மாட்டோமா… வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை ஓட ஓட விரட்டிய பின், மத்தியில் ஆட்சி மாற்றம் அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் முடிவல்ல, விரைவில் டெல்லியில் சந்திப்போம்” என்று பேசியிருந்தார்.
அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்:
இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும், உதயநிதி பேசியது தொடர்பாகவும், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி, மேடையில் ஒரு மூன்றாம் தரப் பேச்சாளர் போலப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொறுப்பில்லாத ஒரு மனிதரைப் போல ஆளுநரை பேசியிருக்கிறார். ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? உங்கள் சித்தாந்தங்களைத் தமிழக மக்களிடம் சொல்லுங்கள். மக்கள் உங்களைச் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.
தேர்தலில் தோல்வியைத் தழுவினால் மக்கள் செருப்பால் அடித்ததாக அர்த்தமா. 1980, 1984,1991, 2001, 2011, 2014, 2016 தேர்தல்களில் தோற்ற திமுக-வை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூட தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆனால், எனக்கு அரசியல் முதிர்ச்சி இருக்கிறது. உதயநிதி பேசியதுபோல நான் பேசமாட்டேன். இப்படி மிக மோசமாகப் பேசிய உதயநிதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு, முதல்வர் ஸ்டாலின் உதயநிதியைக் கண்டிப்பதுடன், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்” என்று கூறினார்.
திமுக மன்னிப்பு கேட்கவேண்டும்:
போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி அதிமுகவைக் கடுமையாகத் தாக்கி பேசியது தொடர்பாக அதிமுகவின் வழக்கறிஞரும் செய்தித் தொடர்பாளராக பாபு முருகவேலிடம் பேசினோம். “செய்யும் தவறை எல்லாம் திமுக செய்துவிட்டு அபாண்டமாக அதிமுக மீது பழி போடுகிறது. 2010-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நீட் மசோதாவைத் தாக்கல் செய்ததே அன்றைய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் காந்தி செல்வன்தான். எப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்வது திமுகவுக்குக் கைவந்த கலை. தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம். எங்களுக்குத் தான் நீட் தேர்வை ரத்து செய்யவைக்கும் ரகசியம் தெரியும் என்று சொன்னார்கள்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா. தேர்தலில் வெற்றிபெறப் பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக. மக்களை ஏமாற்றியதற்காக மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும். என்றுமே அதிமுக நீட் தேர்வுக்கு எதிராகவே பேசிவருகிறது.வெறுமனே மேடையில் ஆவேசமாகப் பேசி குற்றம் சொல்லிவிட்டால், செய்த தவறுகள் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முன்பிருந்தே இந்த விவாகரத்தில் அரசியல் செய்துகொண்டிருப்பது திமுக மட்டுமே.” என்றார் காட்டமாக.