யோகி ஆதித்யநாத் வருங்கால பிரதமர்… ரஜினி கொடுத்த சிக்னல்… உ.பி., காங்கிரஸில் இருந்து ஒலித்த குரல்!

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. வட இந்திய மாநிலங்களில் பெறும் வெற்றியே மத்தியில் ஆட்சியை பிடிக்க போதுமானது என்று பாஜக வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் அதிக எம்.பி தொகுதிகளை பெற்று விளங்கும் உத்தரப் பிரதேசம் தற்போது பாஜக வசமிருப்பது பெரிதும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இங்கு முதலமைச்சராக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத். தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். சமீபத்தில் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இது பெரும் சர்ச்சையானது. வயதில் இளையவரின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுந்தது.

காலில் விழுந்த ரஜினி

இதுபற்றி கேள்வி எழுப்புகையில், வயது சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுந்து வணங்குவேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுதொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. ரஜினி மற்றும் பாஜகவை இணைத்து பலவாறு பேசி வருகின்றனர். ரஜினி விவகாரம் வட இந்தியாவிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுபற்றி உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த
காங்கிரஸ்
மூத்த தலைவர் உதித் ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அடுத்த பிரதமர்

அதற்கு அவர் அளித்த பதில் தான் ஹைலைட். வருங்காலத்தில் யோகி ஆதித்யநாத் பிரதமராக வரலாம் என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இல்லையெனில் இப்படி ஒரு மரியாதையை நடிகர் ரஜினி அளித்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸில் இருந்து ஒலித்த குரல்

மேலும் பேசுகையில், யோகி ஆதித்யநாத்திடம் பிரதமருக்கான அம்சம் காணப்படுகிறது. இப்படியான பேச்சும் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. ஏனெனில் பாஜகவை சேர்ந்த ஒருவர் கூறியிருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்காது.

வெடித்த சர்ச்சை

காங்கிரஸ் கட்சியில், அதுவும் சித்தாந்த ரீதியில் எதிர் நிலையில் இருக்கும் கட்சியில் இருந்து யோகிக்கு ஆதரவாக பேசுவது போல் ஒரு குரல் ஒலித்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உதித் ராஜ் கடந்த 2014 – 2019 காலகட்டத்தில் பாஜகவில் இருந்தார். வடமேற்கு டெல்லி தொகுதி எம்.பியாக பதவி வகித்தார். அதன்பிறகு தான் காங்கிரஸ் கட்சிக்கு தாவியது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.