பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பள்ளத்தாக்கின் சிறு பகுதிகளையும், நகரத்தையும் இணைக்கும் வகையில் சுமார் 1,200 அடி உயரத்தில் கேபிள் கார் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் அதைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், இன்றும் வழமைபோல கேபிள் காரில் பள்ளிக்குச் செல்லும் ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் என எட்டு பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது கேபிள் கார் பாதி வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டது.
சுமார் 1,200 அடி உயரத்தில், 8 பேரின் உயிர் பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லாத நிலையில், ஒரு பெரியவர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனே, உள்ளிருந்த குல்ஃப்ராஸ் என்பவர் செல்போன் மூலம் பாகிஸ்தானின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தகவலளித்திருக்கிறார்.
அதன் மூலம் இந்தத் தகவல் கைபர் பக்துன்க்வா (கேபி) மாகாணத்தின் மூத்த அதிகாரியான சையத் ஹம்மாத் ஹைதரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது. பல வழிகளில் முயன்றும் எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. இறுதியில் ஹெலிகாப்டர் வரவழைத்து, சுமார் 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஆபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.
இது குறித்துப் பேசிய அதிகாரியான சையத் ஹம்மாத் ஹைதர், “காலை ஏழு மணிக்கு கேபிள் கார் பழுதடைந்திருக்கிறது. 5 மணி நேரமாகப் போராடி மீட்டோம். அவர்களின் ஒருவர் கடுமையான அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றப்பட்ட அனைவரும் மருத்துவச் சோதனைக்குப் பிறகு அனுப்பப்பட்டனர்” எனக் குறிப்பிட்டார்.