சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.
நகரில் கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலைவரை அடையாறு, கிண்டி, மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.